2014-02-18 15:18:26

வேட்பாளர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும், இந்திய ஆயர்கள்


பிப்.18,2014. இந்திய கத்தோலிக்கத் திருஅவை எந்தவோர் அரசியல் கட்சியையும் சார்ந்து இருக்காது எனக் கூறியுள்ள அதேவேளை, வருகின்ற பொதுத் தேர்தல்களில், ஓட்டளிப்பதற்கான தங்களின் உரிமைகளை உதறிவிடாமல், கவனமுடனும், விவேகத்துடனும் வாக்களிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.
மக்களின் ஏக்கங்களைப் புரிந்து செயல்படும் வேட்பாளர்களுக்கு கத்தோலிக்கர் ஓட்டளிக்குமாறும் கேட்டுள்ள ஆயர்கள், நாடு செல்லவேண்டிய பாதையும், அதன் முன்னேற்றமும், மக்களின் அன்றாட வாழ்வும் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளைப் பொறுத்தே உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
கடந்த வாரத்தில் கேரளாவின் பாலாய் நகரில் 31வது நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திய இந்திய ஆயர்கள், வருகின்ற கோடையில் இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து தங்கள் அறிக்கையையும் வெளியிட்டனர்.
தொழில்நுட்பம், அறிவியல், ஊடகத்தொடர்பு ஆகியவற்றில் நாடு முன்னேறியிருந்தாலும், இன்னும் நாடு அக்கறை காட்டவேண்டிய பல்வேறு துறைகள் உள்ளன என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
இந்த 31வது நிறையமர்வுக் கூட்டத்தில் இந்தியாவின் 187 ஆயர்கள் மற்றும் பணிக்குழுக்களின் செயலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.