2014-02-18 15:18:55

பிரேசிலில் மனித வியாபாரத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான துறவியர்


பிப்.18,2014. பிரேசிலில் உலக கால்பந்து கோப்பைப் போட்டி நடைபெறவிருக்கும் அனைத்து நகரங்களிலும் மனித வியாபாரம் மற்றும் பாலியலுக்கு மனிதரைப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட அருள்சகோதரிகள், ஏறக்குறைய 8,000 அருள்பணியாளர்கள் மற்றும் 2,700 அருள்சகோதரர்கள் பெரும் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கவுள்ளனர்.
"வாழ்வுக்கு ஆதரவாக விளையாடுங்கள்" என்ற தலைப்பில் வருகிற மே 18ம் தேதியன்று இப்புதிய நடவடிக்கை தொடங்கப்படவிருக்கின்றது.
பிரேசில் துறவு சபைகள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Eurides de Oliveira பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள தகவலில், மனித வாழ்வைக் காப்பதற்கு அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் அந்நாள்களில் கடுமையாய் உழைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மனித வியாபாரமும், பாலியல் பயன்பாடும் பல சிறார், இளையோர் மற்றும் வயது வந்தோரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளவேளை, FIFA உலக கால்பந்து கோப்பை போன்ற பன்னாட்டு விளையாட்டுகள் இடம்பெறும் இடங்கள், இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அருள்சகோதரி Oliveira தெரிவித்தார்.
"வாழ்வுக்கு ஆதரவாக விளையாடுங்கள்" என்ற நடவடிக்கை, பிரேசிலின் நீதி அமைச்சகம், அனைத்துலக காரித்தாஸ், சிறார்க்கான மேய்ப்புபணி அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.