2014-02-18 15:18:02

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் அருள்வாக்கு மட்டுமே நம்மைச் சோதனையிலிருந்து விடுதலையளிக்கின்றது


பிப்.18,2014. சோதனை, தன்னிலே வளர்ந்து, பரவித் தொற்றி அது தன்னையே நியாயப்படுத்துகின்றது, இது கடவுளிடமிருந்து வருவதில்லை, ஆனால் அது நம் தீய நாட்டத்திலிருந்து வருகின்றது, இயேசுவின் அருள்வாக்குக்குச் செவிசாய்ப்பதால் மட்டுமே அதிலிருந்து நாம் விடுதலைபெறுகிறோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை 7 மணிக்கு நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு நமக்கு எப்போதும் நம்பிக்கை அளிக்கிறார் என்றும், நம் வரையறைகளைவிட பரந்த அளவிலான எல்லைகளை நமக்குத் திறந்து விடுகிறார் என்றும் கூறினார்.
புனித யாக்கோபின் திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுள் எவரையும் சோதிப்பதில்லை, நாம் நம் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகிறோம் என்பதே உண்மை என்றும் கூறினார்.
சோதனை எங்கிருந்து வருகிறது, அது நம்மில் எப்படிச் செயல்படுகின்றது என்பதை விளக்கிய திருத்தூதர் யாக்கோபு, அது கடவுளிடமிருந்து வருவதில்லை, மாறாக, அது நம் ஆசைகளிலிருந்து, நம் அகவாழ்வின் பலவீனங்களிலிருந்து, ஆதிப்பாவத்தின் காயங்களிலிருந்து வருகின்றது என்று நமக்குச் சொல்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
சோதனை, வளர்கின்றது, பரவித் தொற்றுகின்றது, அது தன்னையே நியாயப்படுத்துகின்றது என அதன் மூன்று குணங்களை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், சோதனைக்குத் துணை தேவைப்படுகின்றது, அது தொற்றக் கூடியது, நம்மைக் கொல்லக்கூடிய தொற்று அது, அதிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாத ஒரு சூழலில் அது நம்மைச் சிறைப்படுத்துகின்றது என்றும் விளக்கினார்.
நாம் சோதிக்கப்படும்பொழுது இறைவார்த்தையைக் கேட்பதில்லை, அதற்குச் செவிமடுப்பதில்லை, அதை நாம் புரிந்துகொள்வதில்லை என்றும், நாம் சோதிக்கப்படும்பொழுது இறைவார்த்தை மட்டுமே நமக்கு விடுதலையளிக்கின்றது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.