2014-02-17 15:07:46

புனிதரும் மனிதரே : பள்ளி நண்பராலேயே கொலைசெய்யப்பட்டவர்(Saint Donatus of Arezzo)


தோனாத்துசும் ஜூலியனும் சிறுவயதில் சமயக்கல்வி வகுப்புகளில் தோழர்களாய் இருந்தவர்கள். ஜூலியனுக்கு, திருப்பலிக்குத் தயார் செய்யும் வேலையும், தோனாத்துசுக்கு மறைநூல்களைச் சப்தமாக வாசிக்கும் வேலையும் கொடுக்கப்பட்டன. ஆனால் பின்னாளில் ஜூலியன் உரோம் பேரரசரானார். தோனாத்துஸ் ஆயராகி கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டார். இவ்விரு நண்பர்கள் பற்றி எழுதியுள்ள புனித பீட்டர் தமியான், ஆண்டவரின் தோட்டத்தில் ஜூலியனும் தோனாத்துசும் ஒன்றாக வளர்ந்தனர், ஆனால் ஒருவர் விண்ணகத்தின் கேதார் மரமாக மாறினார், மற்றவர் நரகத்தின் நித்திய நெருப்புக்கு ஆளானார் என்று குறிப்பிட்டுள்ளார். பேரரசரான ஜூலியன், பிளேட்டோவின் கொள்கைகளுக்காக, தனது மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் கைவிட்டதால், அவர் Julian the Apostate எனவும் அழைக்கப்பட்டார். பேரரசர் ஜூலியனின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் தோனாத்துசின் பெற்றோரும், அவரது ஆசிரியருமான பிமேனியுசும் கொல்லப்பட்டனர். தோனாத்துஸ் Arezzoவுக்குத் தப்பியோடினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் போதித்த ஹிலாரியன் என்ற துறவியோடு சேர்ந்து Arezzoவில் பணியாற்றினார். அங்கு தோனாத்துஸ் பல புதுமைகளைச் செய்ததாக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. யூப்ரோசினா என்ற இறந்த பெண்ணுக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தார், உள்ளூர் கிணற்றுத் தண்ணீரை நஞ்சாக மாற்றிய பறவை நாகத்துடன் போராடி வெற்றி பெற்றார், சிரியானா என்ற பார்வையற்ற பெண்ணுக்குப் பார்வையளித்தார், உரோமைப் பேரரசில் Arezzoவின் ஆளுனராக இருந்தவரின் மகனைப் பிடித்திருந்த சாத்தானை விரட்டினார் தோனாத்துஸ். திருத்தந்தை ஜூலியஸ் அவர்களால் ஆயராக நியமிக்கப்பட்ட தோனாத்துஸ், கி.பி.362ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பேரரசர் Julian the Apostateஆல் கொல்லப்பட்டார் என்று மரபுவழிச் செய்தி கூறுகிறது. பிப்ரவரி 17 மறைசாட்சி புனித தோனாத்துசின் விழா. Nicomediaவில் பிறந்த தோனாத்துஸ் சிறுவனாக இருந்தபோதே தனது குடும்பத்துடன் உரோமையில் குடியேறியவர். இத்தாலியில் புனித தோனாத்துசின் பெயரால் 70க்கு மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.