2014-02-17 15:43:08

திருத்தந்தை : துன்பங்களையும் தாங்கி உறுதியுடன் நிற்பதே பொறுமை


பிப்.17,2014. விசுவாசத்தில் உறுதியாக நிற்கும் இறைமக்கள், தங்கள் தினசரி வாழ்வின் சோதனைகளையும் துன்பங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வதே அவர்களை முன்னோக்கி நடந்துசெல்ல உதவுகின்றது என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, பொறுமை என்பது ஒரு பிரச்சனையிலிருந்து ஒதுங்கியிருப்பதல்ல, மாறாக, துன்பங்களையும் தாங்கி உறுதியுடன் நிற்பதைக் குறிக்கின்றது என்றார்.
குழந்தைகள்போல் பொறுமையற்றவர்களாகவோ, இயேசுவின் காலத்து பரிசேயர்கள்போல் வானிலிருந்து உடனடி அடயாளங்கள் வேண்டுபவர்களாகவோ இல்லாமல், நம்மோடு பொறுமையுடன் நடைபோடும் இறைவனைப்போல் நாம் செயல்படவேண்டும் எனவும் தன் மறையுரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் எண்ணற்ற சித்ரவதைகளை அனுபவித்தாலும், அவர்கள் இறைவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கைவைத்து பொறுமையுடன் செயல்பட்டனர் என்ற கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் எத்தனையோ குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளான குழந்தைகளுடன் இறைநம்பிக்கையோடு பொறுமையுடன் செயல்பட்டுவருவதை குறித்து தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.