2014-02-17 15:53:38

திருத்தந்தை : அன்பிருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனப்போக்கும் இருக்கிறதா என சிந்திப்போம்


பிப்.17,2014. பசியுற்றிருந்த தன் சீடர்கள், தானியக் கதிர்களைக் கைகளில் கசக்கி அதனை உண்டது, யூதர்களின் ஓய்வுநாள் சட்டங்களுக்கு எதிரானது என சிலர் குற்றஞ்சாட்டியதற்கு இயேசு வழங்கிய பதிலுரை குறித்து இஞ்ஞாயிறு மறையுரையில் விளக்கிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமின் ஆயர் என்ற முறையில் இன்ஃபெர்னெத்தோ என்ற பங்குதளத்தைச் சந்தித்து நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெளியிலிருந்து உட்செல்பவை அல்ல, மாறாக இதயத்திலிருந்து வெளிப்படுபவையே அசுத்தமானவைகளாக உள்ளன என இயேசு கூறியதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாமும் நம் இதயத்திற்குள் என்ன சேர்த்துவைத்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்போம், ஏனெனில் நம் இதயத்திற்குள் மறைந்திருப்பது நமக்கு மட்டுமே தெரியும் என்றார்.
நம் பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கான அன்பு நம் இதயத்தில் இருக்கலாம், ஆனால் நம் பகைவர்களையும் மன்னிக்கும் இயல்பும், அவர்களுக்காகச் செபிக்கும் மனப்போக்கும் நம் இதயத்திற்குள் இருக்கின்றதா என்பதைச் சிந்திக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.