2014-02-17 16:04:55

இலங்கையில் போர்க்குற்ற அனைத்துலக விசாரணை வேண்டும்: நவி பிள்ளை


பிப்.17,2014. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று ஜெனீவாவில் மார்ச் மாதம் நடக்கவுள்ள மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் பரிந்துரைக்கவுள்ளார் என இலங்கையில் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை எழுதியுள்ளது.
இலங்கை அரசு பதில்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக, நவநீதம் பிள்ளை, ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் நகல் ஒன்று அரசிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அப்படி வழங்கப்பட்ட அறிக்கையை தாங்கள் காண நேர்ந்ததாகவும் சண்டே டைம்ஸ் கூறுகிறது.
இலங்கையில் புதிதாக, சாட்சிகள் பாதுகாப்பு சட்டமும் வழிமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளை அவர்கள், பொறுப்பேற்றல் தொடர்பான உள்நாட்டளவிலான வழிமுறைகள் இதுவரை பலன் அளிக்காதது உண்மையையும், நீதியையும் நிலைநாட்டுவதில் இலங்கையிடம் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதையே காட்டுவதாகவும் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றது என்றும் அதற்கான தமது பதிலை இலங்கை அரசு வழங்கியுள்ளது என்றும் ஜெனீவாவிலுள்ள ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.