2014-02-15 14:46:16

திருத்தந்தை பிரான்சிஸ், சைப்ரஸ் அரசுத்தலைவர் சந்திப்பு


பிப்.15,2014. சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து இருபது நிமிடங்கள் தனியே பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades.
திருப்பீடத்துக்கும், சைப்ரஸ் குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் சமயத்தின் பங்கு, சமய சுதந்திர உரிமை பாதுகாக்கப்படல் உட்பட பல்வேறு தலைப்புகள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.
சைப்ரஸ் தீவின் தற்போதைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பற்றிய பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அண்மை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலையற்றதன்மை, அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் தன்னோடு வந்திருந்த 12 பிரதிநிதிகளையும் திருத்தந்தையிடம் அறிமுகப்படுத்தினார் சைப்ரஸ் அரசுத்தலைவர் Anastasiades. மேலும், சைப்ரசின் பாதுகாவலராகிய புனித அந்திரேயாவின் திருவுருவத்தையும் திருத்தந்தையிடம் கொடுத்ததோடு சைப்ரசுக்கும் இப்புனிதருக்கும் இடையேயான தொடர்பையும் விளக்கினார் சைப்ரஸ் அரசுத்தலைவர். புனித பேதுருவின் சகோதரரான புனித அந்திரேயா சைப்ரசில் அடைக்கலம் தேடியிருந்தார் என்பது வரலாறு.
கிழக்கு மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவு, துருக்கிக்குத் தெற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.