2014-02-14 16:04:46

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் இன்னல்கள் கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியோடு எப்பொழுதும் நடக்க வேண்டும்


பிப்.14,2014. கிறிஸ்தவர்கள், பிறருக்கு நற்செய்தியை எடுத்துச்செல்வதில் இன்னல்கள் கண்டு பயப்படாமல், இன்னல்கள் மத்தியில் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு, முன்னோக்கி நடக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவின் இணைப் பாதுகாவலர்களான புனிதர்கள் சிரில், மெத்தோடியசின் விழாவான இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசுவின் சீடர்கள் எப்படி வாழவேண்டும் என்பது பற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவத் தனித்துவம் பற்றியும், கிறிஸ்தவர்கள் என்றால் அனுப்பப்படுகிறவர்கள் என்பது பற்றியும் உரையாற்றிய திருத்தந்தை, நம் ஆண்டவர் சீடர்களை அனுப்பியபோது முன்னோக்கிச் செல்லுங்கள் என்று கூறினார், எனவே கிறிஸ்தவர் என்பவர் பயணங்கள் செய்யும், முன்னோக்கிச் செல்லும் ஆண்டவரின் சீடர் என்று விளக்கினார்.
கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ஆடுகளாக இருக்க வேண்டுமென்பது கிறிஸ்தவத் தனித்துவத்தின் இரண்டாவது கூறு என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர் எப்பொழுதும் ஆடாக இருக்கிறார், இந்தத் தனித்துவத்தை காத்துக்கொள்ள வேண்டும், நம் ஆண்டவர் ஓநாய்கள் மத்தியில் ஆடுகள் போல் நம்மை அனுப்புகிறார் என்றும் கூறினார்.
மகிழ்ச்சியாக இருப்பது கிறிஸ்தவத் தனித்துவத்தின் மூன்றாவது கூறு, ஏனெனில் கிறிஸ்தவர்கள் ஆண்டவரை அறிந்துள்ளனர் மற்றும் ஆண்டவரை பிறருக்குக் கொண்டு செல்கின்றனர், எனவே மகிழ்ச்சியில்லாத கிறிஸ்தவராக ஒருநாளும் நடக்க முடியாது என்று விளக்கினார் திருத்தந்தை.
புனிதர்கள் சிரில், மெத்தோடியசின் விழாவைச் சிறப்பிக்கும் இன்று கிறிஸ்தவத் தனித்துவம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவர் ஒரே இடத்தில் இருப்பவர் அல்ல, அவர் இன்னல்களையும் கடந்து நடப்பவர் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.