2014-02-13 16:25:58

திருத்தந்தை பிரான்சிஸ் - அசைக்கமுடியாத நம்பிக்கையால் இயேசுவின் பாராட்டைப் பெற்ற வேற்று மதப் பெண்


பிப்.13,2014. தாழ்ச்சியான உள்ளத்துடன் இறைவாக்கினை ஏற்கும்போது, அந்த மனநிலை, கடவுள் நம்பிக்கையற்றவரை இறைவனிடம் அழைத்துவரும் அதே வேளையில், ஒருவர் தன் ஆசைகளுக்கு அதிக இடம்கொடுத்தால், அவர் கடவுள் நம்பிக்கையை இழக்கும் ஆபத்தும் உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆசைகளில் மூழ்கி கடவுளை இழந்த சாலமோனையும், தன் அசைக்கமுடியாத நம்பிக்கையால் இயேசுவின் பாராட்டைப் பெற்ற வேற்று மதப் பெண்ணையும் ஒப்புமைப்படுத்தி மறையுரையாற்றினார்.
குழந்தைகளுக்கு உரிய உணவை, நாய்குட்டிகளுக்குக் கொடுக்கக்கூடாது என்று இயேசு கூறுவதற்கு, தன் அறிவுத் திறமையால் அல்ல, மாறாக, தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அந்த அன்னை தந்த பதில், இயேசுவை வியக்கவைத்தது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
தங்கள் வாழ்வு முழுவதையும் பணயம் வைத்து, ஒவ்வொரு நாளும் அமைதியுடன் இறைவனைத் தேடிவரும் பல்லாயிரம் மக்களின் பிரதிநிதியாக இந்த அன்னை அமைந்துள்ளார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இதற்கு நேர்மாறாக, உலகிலேயே மிக உயர்ந்த அறிவாளி என்று போற்றப்பட்ட மன்னன் சாலமோன், தவறான வழிகளில் தன் மனதைச் செலுத்தியதால், போலியான தெய்வங்களுக்கு இடம் அளித்தார் என்று திருத்தந்தை கூறினார்.
மன்னர்களான தாவீதும், சாலமோனும் குற்றங்கள் புரிந்தனர் என்றாலும், தாவீது, தாழ்ச்சியுடன் மீண்டும் இறைவனிடம் திரும்பியதால் அவர் குற்றங்கள் மன்னிக்கப்பட்டன என்றும், சாலமோனோ தன் மமதையால் இறைவனிடம் திரும்ப வராமல், வேற்று தெய்வங்களை நாடிச் சென்றதால், அவர் தன் கடவுள் நம்பிக்கையை இழந்தார் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் ஒப்புமைப்படுத்திப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.