2014-02-12 16:40:28

நோயுற்றோர் உலக நாளையொட்டி, பார்வைத்திறன் அற்றவர்களுக்கு மணிலாவில் சிறப்பு நிகழ்ச்சி


பிப்.12,2014. லூர்து நகர் மரியன்னையின் திருநாளான பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட 22வது நோயுற்றோர் உலக நாளையொட்டி, பார்வைத்திறன் அற்றவர்களுக்கு மணிலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை மணிலா பேராயர் கர்தினால் Louis Antonio Tagle அவர்கள், தலைமையேற்று நடத்தினார்.
1992ம் ஆண்டு, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கப்பட்ட இச்சிறப்பு நாளின் 22வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு, "நம்பிக்கையும், பிறரன்பும்: நாமும் நம் சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்வைக் கையளிப்போம்" என்பது மையக்கருத்தாக இருந்தது.
"துன்புறும் உங்கள் வழியாக, துன்புறும் கிறிஸ்துவை, திருஅவை தொடர்ந்து அடையாளம் கண்டு வருகிறது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளுக்கென வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியின் நகல்கள், இச்சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், மணிலாவில் உள்ள தூய ஆவியார் ஆலயத்தில், மணிலாவின் முன்னாள் பேராயர் கர்தினால் Gaudencio Rosales அவர்கள், இச்செவ்வாயன்று, நோயுற்றோருக்கென சிறப்புத் திருப்பலி ஆற்றினார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.