2014-02-12 13:09:47

அமைதி ஆர்வலர்கள்– தியோடர் ரூஸ்வெல்ட்(1906ல் நொபெல் அமைதி விருது)


பிப்.12,2014. 1906ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது அரசுத்தலைவராவார். "T.R." என்று அழைக்கப்படும் ரூஸ்வெல்ட், தற்போதைய அமெரிக்காவைக் கட்டி எழுப்புவதற்கு முக்கிய பணியாற்றியவர். இவர் பகட்டான தோற்றமும், இலட்சிய ஆசைகளும் கொண்டவர். முற்போக்கு இயக்கங்களில் தலைமைப் பண்பில் சிறந்து காரியங்களைத் திட்டமிட்டு செய்வதில் திறமையானவராகத் திகழ்ந்தார். இளம்வயதிலே அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ரூஸ்வெல்ட், இஸ்பானிய-அமெரிக்கப் போரில் இராணுவத் தளபதியாகவும் இருந்தார். எதார்த்தமான தலைவர் என்று பன்னாட்டு அளவிலும் புகழ்பெற்றிருந்தார். இவர் இயற்கையை அன்பு செய்பவர். நான்கு பிள்ளைகள் கொண்ட செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரித்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் மல்யுத்த விளையாட்டில் இருந்த ஆர்வத்தினால் மல்யுத்தப் போட்டியில் பங்கெடுத்து மல்யுத்த வீரருக்கான விருதையும் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் கடற்படையில் அதிக ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். பள்ளிப்பருவத்திலேயே எழுத்தாற்றலை வெளிப்படுத்திய இவர், பள்ளிக்கென பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டார்.
கொலம்பிய சட்டக் கல்லூரியில் பயின்றபோது அரசியல் கட்சியில் ஆர்வம்கொண்டு குடியரசு(republican) கட்சியின் உறுப்பினராகி மக்கள் பணியில் ஈடுபட்டார் தியோடர் ரூஸ்வெல்ட். இவரது மனைவியும் மகளும் இறந்தனர். மீண்டும் திருமணம் முடித்து, ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் ஈடுபட்ட காலப்பகுதியில் பல நூல்களை எழுதினார். வரலாற்று ஆய்வுகள் மற்றும் அவை தொடர்பான நூல்களை எழுதுவதில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அமெரிக்க வரலாற்றியியலாளர் கழகத்தின் தலைவராக நியமனம் பெற்றார். 1988ல் அரசியலில் நுழைந்தார். குடிமக்கள் தொண்டு கழகத்தின் ஆணையாளர் பொறுப்பேற்று, தேவையான பல மாற்றங்களை மக்களிடம் அறிமுகம் செய்தார். தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், நியுயார்க் நகரின் காவல்துறை தலைவராகப் பொறுப்பேற்று, காவல்துறையில் இருந்த ஊழல்களை இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றியமைத்து, நற்பெயரையும் பெற்றுக்கொடுத்தார். சட்ட திட்டங்களைக் கடுமையாக்கி, தவறிழைப்போருக்குத் தண்டனை வழங்கினார். நகர மக்களின் பாதுகாப்பிற்காகப் புதிய நடைமுறைகளை அமல்படுத்தினார். மிதிவண்டிகள் மூலமான ரோந்து நடவடிக்கைகளை அறிமுகம் செய்தார். அமெரிக்கக் கடற்படையின் இணைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்ற இவர், "எந்த நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், போர் ஒன்று மூண்டால் அதற்கும் தயார்" என்றும் கூறினார். அச்சமயம் அமெரிக்கா, இஸ்பெனியுடன் போரில் ஈடுபட்டது. கடற்படையில் இருந்த ரூஸ்வெல்ட்டும் போர்க்களத்திற்குச் சென்றார். இந்தப் போரில் வெற்றிபெற கடற்படை மட்டும் போதாது என்று உணர்ந்து, தரைப்படையின் துணையுடனும், கவ்பாய் குழுவையும் ஒன்றிணைத்து தனிப்படையணி ஒன்றை அமைத்தார். எதிரிகளை அடிமைப்படுத்தியது அமெரிக்காவின் உடனடி வெற்றிக்கு வழி வகுத்தது. இவர் போருக்காகத் தன்னையே அர்ப்பணித்து செயல்பட்டதன் காரணமாக, பின்னாளில் இவருக்கு "அமெரிக்கப் புதல்வருக்கான விருதும்" கிட்டியது. போரைப் போன்றே அமைதிக்கும் ஒப்புரவுக்கும் பங்காற்ற இவர் தவறவில்லை. போர்க்கள வீரனாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு நியூயார்க் நகர ஆளுநர் பதவியுடன், மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது.
வில்லியம் மெகேன்லினை அமெரிக்காவின் அரசுத்தலைவராக்கும் முயற்சியை மேற்கொண்ட தியோடர் ரூஸ்வெல்ட் உதவி அரசுத்தலைவராக நியமனமானார். நகரின், நாட்டின் பாதுகாப்பு, சனநாயகம் தொடர்பாக பல முக்கிய தீர்மானங்களை எடுத்ததோடு, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, தனது அனுபவங்களையும் பயன்படுத்தினார். ஒரு கொலை நிகழ்வு காரணமாக, ஓர் ஆண்டுக்குள் அரசுத்தலைவர் விடைபெற்றுச் செல்ல, பலரின் விருப்பத்துக்கு இணங்க, அரசுத்தலைவராக நியமனம் பெற்றார் தியோடர் ரூஸ்வெல்ட். அப்போதிருந்த அமைச்சரவையுடன் தொடர்ந்து செயற்பட்டார். நிர்வாகத்தின்போது நிர்வாக அதிகாரி அல்லாமல், மக்கள் சேவையாளனாகவே செயற்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் மத்தியில் வலியுறுத்தினார். மக்களது உரிமைக்கே முதல் இடம், பின்னர்தான் தனி நபர் என்ற கோட்பாட்டுக்கே இவர் முக்கியத்துவம் வழங்கினார். இளமைப்பருவத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, அதனால் கிடைத்த அனுபவங்களை தனது நிர்வாகத்துக்கு அடிப்படையாகக் கொண்டார். இவர் இரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான புதிய சட்டங்களைக் கொண்டு வந்தார். உணவு வகைகளின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தியதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் விலங்குகளின் சுதந்திரத்துக்கான சட்டங்களையும் வகுத்தார். இதன் காரணமாக தொடர்ந்து வந்த தேர்தலில் 56.4 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.
சிறந்த வெளிநாட்டுக் கொள்கை ஒன்றையும் தியோடெர் ரூஸ்வெல்ட் கடைப்பிடித்தார். அதுமட்டுமன்றி, அமெரிக்காவின் இறையாண்மையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியதோடு, உலகப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் உதவினார். இராணுவத்தின் உதவியுடன் நாட்டின் வீடுகளைப் புதிதாக அமைத்ததுடன், புதிய இரயில் பாதையையும் அமைத்தார். கடற்படைக்குப் புதிதாக ஆள்களைத் திரட்டி அமெரிக்காவின் அதிகாரத்தை உறுதிசெய்தார். நாட்டின் தேசியக் கொள்கையை மறுசீரமைப்பு செய்து மக்களுக்காகப் புதிதாகப் பலவற்றைச் செய்வதில் அதிகக் கவனம் எடுத்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26வது அரசுத்தலைவரான தியோடர் ரூஸ்வெல்ட் 1906ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதையும் பெற்றார். இரஷ்ய-ஜப்பானிய போர் முடிவுக்கு வருவதற்கு இவர் எடுத்த முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. அக்காலத்தில் நொபெல் அமைதி விருதைப் பெற்ற முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டவர் என்ற பெருமையையும் தியோடர் ரூஸ்வெல்ட் பெற்றார். எவ்வளவு நம்மிடம் கொடுக்கப்படுகிறதோ அவ்வளவு நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று சொன்னவர் தியோடர் ரூஸ்வெல்ட்.
நீண்டகால உழைப்பினால் களைப்படைந்திருந்த தியோடர் ரூஸ்வெல்ட், வனப்பகுதியில் ஓய்வெடுக்கலானார். அங்கு வேட்டையாடுவதில் ஈடுபட்டு, வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோல் மற்றும் பிற பொருள்களை அமெரிக்க அருங்காட்சியகத்துக்குக் கொண்டு வந்தார். நூல்களை எழுதுவதற்கு இச்சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இவர் 35 நூல்களை எழுதியுள்ளார். தனது இறுதிக் காலகட்டத்தில் அமேசான் வனப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்டபோது, மலேரியா நோயால் தாக்கப்பட்டார். 1919ம் ஆண்டு சனவரி 6ம் நாள் மரணமடைந்தார் தியோடர் ரூஸ்வெல்ட்.







All the contents on this site are copyrighted ©.