2014-02-10 16:13:41

முன்னாள் திருத்தந்தை பதவி விலகுவதாக அறிவித்ததன் ஓராண்டு நிறைவு


பிப்.10,2014. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன் பதவி விலகலை வெளியிட்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தொடர்ந்த செபங்களின் மூலம் திரு அவைக்கான தன் பங்களிப்பை வழங்கிவருவதாகக் கூறினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை அருட்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டதன் ஓராண்டு இந்த செவ்வாய்க்கிழமை நிறைவுறுவதையொட்டி பேட்டியளித்த திருப்பீடப்பேச்சாளர், ஒரே நேரத்தில் இரு திருத்தந்தையர்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தாதா என சிலர் அச்சத்தை வெளியிட்டதற்கு காரணம், அவர்கள் திருப்பீடத் தலைமைப் பொறுப்பை, அதிகாரமிக்கப் பதவியாக நோக்கியதேயாகும் எனக் கூறினார்.
இது அதிகாரத்தின் இடமல்ல, மாறாக பணிக்கான பதவி என்பதால், ஒருவர் விலகுவதும், மற்றவர் பதவியேற்பதும் எளிதாக உள்ளது எனவும் எடுத்துரைத்தார் இயேசுசபை அருட்தந்தை லொம்பார்தி.
இறைவனுக்கான பணியில் மக்களின் நலனை, கருத்தில் கொண்டு செயலாற்றும்போது அங்கு குழப்பங்கள் வர வாய்ப்பில்லை என்ற திருப்பீடப்பேச்சாளர், இரு திருத்தந்தையர்களும் சந்தித்துக்கொள்வதையும் தொடர்பிலிருப்பதையும் மேற்கோளாகக் காட்டினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், செபவாழ்விற்கென தன்னை அர்ப்பணித்து திரு அவைக்கான செபம் மூலமாக தன் பங்களிப்பை வழங்கிவருகிறார் எனவும் கூறினார் அருட்தந்தை லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.