2014-02-10 15:09:21

புனிதரும் மனிதரே : தொண்டை நோய் மருத்துவர்


ஒரு சமயம் சிறுவன் ஒருவனின் தொண்டைக்குள் மீன்முள் ஒன்று சென்று அடைத்துக்கொண்டது. அதனால் அச்சிறுவன் மூச்சுவிடத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இறக்கும் நிலையில் இருந்த அச்சிறுவனை, ஆயர் பிலேசிடம் அழைத்து வந்தனர். அவர் அச்சிறுவனைக் குணப்படுத்தினார். இதன் நினைவாக, புனித ஆயர் பிலேசின் விழாவாகிய பிப்ரவரி 3ம் தேதியன்று ஆண்டுதோறும் கத்தோலிக்க ஆலயங்களில் அருள்பணியாளர்கள் இரு மெழுகுதிரிகளை குறுக்குவாக்கில் கட்டி விசுவாசிகளின் தொண்டைகளை மந்திரிக்கின்றனர். 8ம் நூற்றாண்டில் பணக்கார மற்றும் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த பிலேஸ் நல்ல கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். இவர் அர்மேனிய நாட்டு Sebasteaவின் ஆயரான பின்னர் கிறிஸ்தவத்துக்கு எதிராக, மீண்டும் அடக்குமுறை தொடங்கியது. அப்போது இந்த அடக்குமுறைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு மலைப்பகுதிக்குச் செல்லுமாறு ஆயர் பிலேஸ் இறைவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார். அவரும் சென்றுவிட்டார். அந்தப் பகுதியில் வேட்டையாடிய மனிதர்கள் அங்கே ஒரு குகையில் ஆயர் பிலேஸ் அச்சமின்றி கொடிய விலங்குகளுக்கு மத்தியில் இருந்துகொண்டு அந்த விலங்குகளின் நோய்களைக் குணமாக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர். இவரை யார் எனக் கண்டுகொண்ட அந்த மனிதர்கள், விசாரணைக்காக அவரைப் பிடித்துச் சென்றனர். அவர் கொண்டு செல்லப்பட்ட வழியில், ஒரு ஓநாய் ஒரு பன்றியைப் பிடித்துவைத்திருப்பதைக் கண்டார். அந்தப் பன்றி ஓர் ஏழைப் பெண்ணுக்கு உரியது. எனவே ஆயர் பிலேஸ் ஓநாயிடம் பேசி அந்தப் பன்றியை விடுவிக்குமாறு சொன்னார். பின்னர் ஆயர் பிலேஸ் பட்டினியாய்க் கிடந்து சாக வேண்டுமெனத் தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தப் பெண், ஆயர் பிலேஸ் தனக்குச் செய்த உதவிக்கு நன்றியாக, அவர் சிறையில் இருந்தபோது ஒரு துவாரத்தின் வழியாக உணவும் மெழுகுதிரிகளும் கொடுத்தார். இறுதியில் ஆயர் பிலேசை ஆளுனர் கொலை செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.