2014-02-10 16:04:41

திருத்தந்தையின் திங்கள் காலை திருப்பலி மறையுரை


பிப்.10,2014. புனிதத்துவம் மற்றும் கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னம் எனும் மறையுண்மைகளை திருப்பலியில் கண்டுகொள்வோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள், குருக்கள், திருவிலியம் ஆகியவை வழியாக, தன் மக்களுடன் பேசிய இறைவன், தன் பிரசன்னத்தின் மூலமும் உரையாடுகிறார், அதுவே திருப்பலியின்போது இடம்பெறுகிறது என்றார்.
திருப்பலி என்பது இறுதி இரவு உணவின் சாயல் அல்ல, மாறாக, உலகின் மீட்புக்காக தந்தைக்குத் தன்னையே கையளிக்கும் இயேசுவின் பிரசன்னம் என்ற திருத்தந்தை, இயேசுவின் குடில் மற்றும் சிலுவைப்பாதை போன்று ஒரு நிகழ்வின் மறுசாயல் அல்ல திருப்பலி, மாறாக உண்மை பிரசன்னம் எனவும் எடுத்துரைத்தார்.
திருப்பலிக்குச் செல்வது சுற்றுலாப்பயணம் போன்றதல்ல, அது ஒரு மறையுண்மைக்குள் நுழைவது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி கொண்டாட்டமென்பது, இறைவனின் மறையுண்மைக்குள் நுழையும் விருப்பத்தை உள்ளடக்கியதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.