2014-02-08 15:51:59

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்தில் இலங்கை மக்களுக்குத் சிறப்பான இடம்


பிப்.08,2014. காயங்களைக் குணப்படுத்துவதும், நேற்றைய பகைவர்களோடு ஒத்துழைத்து நாளைய தினத்தை ஒன்றிணைந்து கட்டி எழுப்புவதும் என்பது எளிதானது அல்ல என்பதை தான் அறிந்துள்ளேன், எனினும், இந்தப் பாதை மட்டுமே, வருங்காலத்துக்கும், வளர்ச்சிக்கும் அமைதிக்கும் நம்பிக்கை அளிக்கின்றது என்று இலங்கை மக்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிவாழ் இலங்கை மக்களை இச்சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அண்மை ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்கள் பலரின் இறப்புக்களுக்கும் பெரும் சேதங்களுக்கும், பலர் கண்ணீர் சிந்தவும் காரணமாகியுள்ளதையும் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கு அமைதி மற்றும் ஒப்புரவுக் கொடைகளை ஆண்டவர் வழங்கவும், இலங்கையில் வாழும் அனைவரும் நல்லதோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஆண்டவர் உதவிசெய்யவும் வேண்டுமென அவரிடம் செபிப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை, தனது செபத்தில் இலங்கை மக்களுக்குச் சிறப்பான இடம் இருப்பதாகவும் உறுதி கூறினார்.
இலங்கை நாட்டை அன்னைமரியிடம் அர்ப்பணித்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று இத்தாலிவாழ் இலங்கை மக்கள் உரோம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், தங்களின் தேவைகளுக்கு, குறிப்பாக, வாழ்வில் பிரச்சனைகள் நிறைந்து அதனைச் சுமையாய் உணரும்போது அன்னைமரியிடம் தயக்கமின்றி அண்டிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அழகு இவற்றால் அந்நாடு இந்தியப் பெருங்கடலின் முத்து என அழைக்கப்படுகிறது, இந்த முத்து சிப்பியின் கண்ணீரிலிருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது, ஆயினும், அண்மை ஆண்டுகளின் சண்டைகளால் பலர் கண்ணீர் வடித்துள்ளனர் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில், 1940ம் ஆண்டில் அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த கொழும்புப் பேராயர் Jean-Marie Masson அவர்கள், போரின் பாதிப்பின்றி இலங்கை காப்பாற்றப்பட்டால் அந்நாட்டில் அன்னைமரிக்கென ஒரு திருத்தலம் கட்டுவதாக உறுதியளித்தார், அதேபோல் இலங்கையும் காப்பாற்றப்பட்டது. அதற்கு நன்றியாக, அந்நாட்டின் Tewatteல் இலங்கை அன்னைமரியா திருத்தலம் எழுப்பப்பட்டது. அவ்வாலயம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திருப்பயணிகள் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.