2014-02-07 15:08:31

பிப்.08,2014. புனிதரும் மனிதரே. – மன உறுதி மாற்றம் தரும்


இத்தாலியின் மிலானுக்கு அருகே ஒரு கிராமத்தில் கப்ரினி என்ற பெண்மணிக்கு 52ம் வயதில் 13ம் குழந்தையாக ஃபிரான்செஸ்கா பிறந்தார். குறைந்த எடையுடன் நோயாளிபோல் பிறந்த இந்த பெண்குழந்தை இறந்துவிடும் என அஞ்சிய பெற்றோர், அதனை உடனே கோவிலுக்கு எடுத்துக்கொண்டுபோய் திருமுழுக்கு அளித்தனர். ஆனால் ஃபிரான்செஸ்கா பிழைத்துக்கொண்டார். மெல்லிய தேகம் கொண்டு நோயாளிபோல் காட்சியளித்த ஃபிரான்செஸ்கா, தன் 18ம் வயதில் துறவுமடத்தில் இணைய ஆர்வம் கொண்டு விண்ணப்பித்தார். ஆனால், இவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. ஆசிரியப்பணி படிப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்ற ஃபிரான்செஸ்காவுக்கு சீனா மற்றும் இந்தியா சென்று மறைபோதகப் பணியாற்றவேண்டும் என்ற தணியாத தாகம் இருந்தது. சிறுவயதில் ஒருமுறை தண்ணீரில் விழுந்து உயிரிழக்கும் ஆபத்தை சந்தித்ததால் தண்ணீர் என்றால் இவருக்குப் பயம். இவரின் 24ம் வயதில், பெற்றோர்களற்ற சிறுமிகளுக்கான அநாதை இல்லத்தை எடுத்து நடத்தும் வாய்ப்புக் கிட்டியது. துறவியாக முடியவில்லை என்றாலும், இப்படியாவது சமூகத்திற்கு சேவை செய்வோம் என்ற மனநிறைவுடன், தன்னையொத்த தியாகமனப்பான்மையுடைய பெண்களுடன் இணைந்து அந்த அநாதை இல்லத்தை எடுத்து நடத்தினார். இத்தாலியின் லோதி ஆயரின் வழிகாட்டுதலில் ஒரு துறவு சபையையும் துவக்கினார். இந்தியாவிலும் சீனாவிலும் மறைப்பணியாற்றச் சென்ற இயேசுசபை புனிதர் பிரான்சிஸ் சேவியரின் பெயரை, தன் 27ம் வயதில் துறவறம் பூண்டபோது துறவுப்பெயராக எடுத்துக்கொண்டு பிரான்சிஸ் சேவியர் கப்ரினி என அழைக்கப்பட ஆவல்கொண்டார். தன் 35 ஆண்டுகாலப் பணியில், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களிடையே ஆற்றிய பணியில், மருத்துவமனைகள், கைவிடப்பட்டோர் மற்றும் நோயாளிகளுக்கான தங்குமிடங்கள் என 67 இல்லங்களைக் கட்டி பணியாற்றினார் கப்ரினி. கீழைநாடுகளில் பணிபுரியும் அவர் விருப்பம் நிறைவேறவில்லையெனினும், கடைசிவரை ஏழைகளுக்குகென்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார் புனிதர் பிரான்சிஸ் சேவியர் கப்ரினி. தண்ணீர் என்றாலே பயப்பட்டுவந்த புனிதர் பிரான்சிஸ் சேவியர் கப்ரினி, 30 தடவைகளுக்குமேல் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பயணம் செய்திருக்கிறார், அதாவது இத்தாலிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.