2014-02-07 15:30:07

திருத்தந்தை பிரான்சிஸ் போலந்து ஆயர்களிடம் : பிரிவினைகளை ஒதுக்கி ஒன்றிப்பையும் அமைதியையும் கட்டியெழுப்புங்கள்


பிப்.07,2014. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தளமாக அமையும் குடும்பம், திருமணம், குறிப்பாக, இளையோரைத் திருமணத்துக்குத் தயாரித்தல், குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கான அழைப்பு போன்றவைகளில் போலந்து ஆயர்கள் தங்கள் மேய்ப்புப்பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்தித்து தங்களின் மேய்ப்புப்பணிகள் குறித்த விபரங்களை வழங்கும் அட் லிமினாவையொட்டி போலந்து நாட்டு ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்களுக்கு மத்தியில் ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணி ஒன்றிப்பு முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்.
போலந்தின் கிராக்கோவ் நகரில் 2016ம் ஆண்டில் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்றைய புதிய தொழில்நுட்ப வசதிகள், தொடர்புகளுக்குப் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன, அதேசமயம் மனிதர்களுக்கு இடையேயான நேரடி ஆள்-ஆள் உறவுகளைக் குறைக்கின்றன எனவும் கூறினார்.
எனினும், இளையோரின் மனங்களில் மிக ஆழமான தேடல் இருக்கின்றது, அதை நிறைவேற்றுவதற்குத் தலத்திருஅவை முயற்சிகள் எடுக்குமாறும், மறைக்கல்வி, அருளடையாளங்கள், பக்த இயக்கங்கள் போன்றவை வழியாக இளையோர் கிறிஸ்துவையும் இறையன்பையும் அறிவதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான அழைத்தலிலும் அவர்களுக்கானப் பயிற்சியிலும் போலந்து ஆயர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், குருக்களிலும், துறவிகளிலும் மறைப்பணி ஆர்வம் அதிகரிக்க வேண்டுமென்றும், இப்பணியில் ஏழ்மை மற்றும் பிறரன்புக்குச் சாட்சிகளாக அவர்கள் வாழ வேண்டுமென்றும் கூறினார்.
போலந்து நாட்டில் தற்போது பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வேலையில்லாதவர், வீடற்றவர், நோயாளிகள், கைவிடப்பட்டவர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலாத குடும்பத்தினர் போன்றவரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் போலந்து திருஅவை இத்தகைய மக்களுடன் நெருக்கமாக இருந்து மேய்ப்புப்பணிகளை ஆற்றுமாறும் கூறினார் திருத்தந்தை.
வருகிற ஏப்ரல் 27ம் தேதியன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருப்பதையும், அவரது உயரிய வாழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.