2014-02-07 15:30:14

திருத்தந்தை பிரான்சிஸ் : தாழ்ச்சியுடன் நற்செய்தி அறிவிக்க அழைப்பு


பிப்.07,2014. இயேசுவின் உண்மையுள்ள சீடர், தான் கிறிஸ்தவராக இருப்பதை ஒரு சலுகையாக உணராமால் இயேசுவைப் பின்சென்று அவரை அறிவிப்பார் என்று இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏரோது அரசர், தூய திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டிய நிகழ்வை விவரிக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் தூய திருமுழுக்கு யோவான் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று கூறினார்
கடவுள் தம் மகனின் வழியைத் தயார் செய்வதற்கு அனுப்பிய மனிதரே திருமுழுக்கு யோவான் என்றும், ஊழலும் தீயொழுக்கங்களும் நிரம்பிய ஏரோதின் அரண்மனையில் ஒவ்வொருவரும் மனமாற வேண்டுமென்று யோவான் அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தான் மெசியா எனச் சொல்வதற்கு, திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது, ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை எனவும், திருமுழுக்கு யோவான் உண்மையின் மனிதர் எனவும், இம்மனிதர் தனது துன்பங்களிலும், அவமானங்களிலும் இயேசுவைப் பின்பற்றினார் எனவும் கூறினார் திருத்தந்தை.
முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா போன்று திருமுழுக்கு யோவானுக்கும் இருளான தருணங்கள் இருந்தன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கிறிஸ்தவர்களாய் இருப்பதன் சலுகையைப் பயன்படுத்தாமல் தாழ்ச்சியுடன் நற்செய்தி அறிவிக்க வேண்டுமென்று மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.