2014-02-06 14:42:08

புனிதரும் மனிதரே : அப்பாவி அநீதியாய்த் தண்டனைபெறக் கூடாது


அக்காலத்தில் பிரபுக்கள் குடும்பங்களில் வேட்டையாடுதல் பொதுவான பழக்கமாக இருந்து வந்தது. இத்தாலியின் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த கோன்ராடும் தனது வாழ்வில் பெரும் பகுதியை வேட்டையாடுவதில் செலவழித்தார். Euphrosyne என்ற பிரபுவின் மகளை இவர் திருமணம் செய்தார். ஒருநாள் கோன்ராட் தனது பணியாளர்களோடு காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தனது பணியாளர்களிடம், புதர்செடிகளையும் குப்பைகளையும் அங்குமிங்குமாகப் பரப்பி அவற்றுக்கு நெருப்பு வைக்குமாறுச் சொன்னார். பணியாளர்களும் அவ்வாறே செய்தனர். அப்போது, எவ்வித முன்அறிகுறியும் இன்றி, எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசியது. உடனே அந்தத் தீ அவர்கள் திட்டமிட்ட இடங்களுக்கும் அப்பால் வேகமாகப் பரவி அக்காட்டுக்கு அருகிலிருந்த கிராமங்கள், வீடுகள் மற்றும் நிலங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதைப் பார்த்ததும் கோன்ராட் பயத்தினால் அவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டார். ஆனால் அதிகாரிகள் அப்பகுதியில், பிச்சையெடுத்து வாழ்ந்துவந்த ஓர் அப்பாவி மனிதரைக் கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தனர். இந்த அநீதி பற்றிக் கேள்விப்பட்ட கோன்ராட் அதிகாரிகளிடம் சென்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அப்பாவி மனிதரின் உயிரைக் காப்பாற்றினார். பின்னர் கோன்ராடும் அவரது மனைவியும் தங்களின் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, இந்தத் தீ விபத்தில் தங்களின் சொத்துக்களை இழந்த எல்லாருக்கும் இழப்பீட்டுத் தொகையாக அவற்றைப் பிரித்துக் கொடுத்தனர். பின்னர் கோன்ராட் பிரான்சிஸ்கன் துறவு சபையிலும், அவரது மனைவி ஏழைகளின் புனித கிளாரா துறவு சபையிலும் சேர்ந்தனர். இவரது மனைவியும் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். வட இத்தாலியின் பியாச்சென்சா நகரில் 1290ம் ஆண்டில் பிறந்த கோன்ராட், 1350ம் ஆண்டில் திருச்சிலுவையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தபோது உயிர்துறந்தார். இவரது விழா பிப்ரவரி 19ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. புனித கோன்ராட் உயிரோடு வாழ்ந்தபோதே பல புதுமைகளைச் செய்தார். இவர் இறந்த பின்னரும் பல புதுமைகள் நடக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.