2014-02-05 15:38:48

மதத்தின் அடிப்படையில் மக்களின் வாக்குறுதிகளைப் பெற முயல்வது சரியா - இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி


பிப்.05,2014. மதத்தின் அடிப்படையில் மக்களின் வாக்குறுதிகளைப் பெற முயல்வது சரியா என்ற கேள்வி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது என்று இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத் தலைவர் Sajan George அவர்கள் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை 'இந்து மாநிலமாக உருவாக்குவேன்' என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 1995ம் ஆண்டு சிவசேனா கட்சியின் தலைவர் மனோகர் ஜோஷி அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அவரது தேர்தல் மத அடிப்படையில் எழுந்தது என்று கூறி, அவர் தேர்தல் செல்லுபடியாகாது என்று மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜோஷி அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு அவருக்குச் சாதகமாக முடிந்தது.
தற்போது, இந்தியா தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், 1995ம் ஆண்டு, உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்சநீதி மன்றம் விடுத்துள்ள கருத்து மதத் தலைவர்கள் மத்தியில் வரவேற்பை உருவாக்கியுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இக்கருத்தில் விவாதங்கள் எழுவதே நாட்டிற்கு நல்லதொரு அடையாளம் என்றும், இத்தகைய விவாதங்களே, இந்திய நாடு மத சார்பற்ற நாடு என்பதை உலகறியச் சொல்லும் என்றும் கிறிஸ்தவத் தலைவர் SG அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.