2014-02-05 15:35:33

பேராயர் Silvano Tomasi - இரண்டாம் ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் அடையவில்லையெனினும் நம்பிக்கை தருகின்றது


பிப்.05,2014. சிரியா நாட்டில் அமைதியைக் கொணரும் ஒரு முயற்சியாக, அண்மையில் நடைபெற்ற இரண்டாம் ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் அடையவில்லை என்றாலும், நம்பிக்கை தரும் அடையாளங்களும் வெளியாயின என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை முடிவுற்ற இரண்டாம் ஜெனீவா பேச்சுவார்த்தைகள் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்குகொண்ட பேராயர் Silvano Tomasi அவர்கள், Zenit என்ற கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கடந்த இரு ஆண்டுகளாக சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 1,36,000 த்திற்கும் அதிகமான உயிர்கள் பலியாயின என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Tomasi அவர்கள், இந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் வன்முறைகள் நிறுத்தப்படும் என்று அனைவரும் கொண்டிருந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது மிகுந்த ஏமாற்றம் தருகிறது என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், பிப்ரவரி 10ம் தேதி இவ்விரு தரப்பினரும் மீண்டும் ஜெனீவாவில் தங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர விருப்பம் தெரிவித்திருப்பது நம்பிக்கை தருகிறது என்றும் பேராயர் Tomasi அவர்கள் இப்பேட்டியில் எடுத்துரைத்தார்.
மதம், இனம் என்ற வேறுபாடுகள் இல்லாமல், குடிமக்கள் என்ற ஒரே ஒரு அளவுகோல் கொண்டு சிரியாவில் அனவைரும் சம உரிமையுடன் வாழும் வழிகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று பேராயர் Tomasi அவர்கள் வலியுறுத்தினார்.
சிரியாவில் அமைதி நிலவ நாம் செபங்களை எழுப்பும்போது, வன்முறையால் துன்புறும் ஆப்ரிக்க மத்திய குடியரசு, மாலி, காங்கோ ஆகிய நாடுகளுக்காகவும் நாம் செபங்களை எழுப்பவேண்டும் என்று பேராயர் Tomasi அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.