2014-02-05 14:54:33

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


பிப்.,05,2014. இத்தாலி முழுவதும் கடந்த மூன்று நான்கு நாட்களாகவே மழை தூறிக்கொண்டேயிருக்கிறது. உரோம் நகரும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்புதன் காலையும் வானம் தூறிக்கொண்டிருக்க, அதையும் பொருட்படுத்தாமல், திருத்தந்தையின் மறைபோதகத்தைக் கேட்க பெருமளவில் மக்கள் கூடியதால், தூய பேதுரு வளாகத்திலேயே விசுவாசிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அவ்வப்போது தூறி வந்த மழை, திருத்தந்தையின் பொதுமறைபோதகத்தின்போது, தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தது ஆச்சரியம் தரும் ஒன்றாகத்தான் நோக்கப்படுகிறது. பொதுமறைபோதகம் நிறைவுறும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் நோயாளிகளைச் சந்திப்பதற்கு மக்களிடையே நடந்து செல்வதற்கு உதவுவதுபோல், இலேசாக இளவெயிலும் தலைநீட்டியது இன்னுமோர் ஆச்சரியம். தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு திருநற்கருணை எனும் அருளடையாளம் குறித்து தன் மறைபோதனையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்வை நமக்குள் துவக்கிவைக்கும் அருளடையாளங்கள் குறித்த நம் மறைக்கல்விபோதனையில் இன்று, கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தத்தின் அருளடையாளமாகிய திருநற்கருணை குறித்து நோக்குவோம். திருஅவை வாழ்வின் ஆதாரமாக இருக்கும் திருநற்கருணை அருளடையாளம், நம் விசுவாசம், தோழமை, மற்றும் சாட்சியத் திருப்பயணத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மோடு ஒன்றிணைந்து வருகிறது. கிறிஸ்துவின் பலி காணிக்கையாக்கப்படும் மேடையிலிருந்து பெறப்படும் வாழ்வின் அப்பத்தைக்கொண்டுமட்டும் திருப்பலி எனும் பெருவிருந்து நமக்கு உரமூட்டவில்லை, அதேவேளை, விவிலியத்தின் இறைவார்த்தைகளை அறிக்கையிடுவதன்மூலமும் நாம் உரமூட்டப்படுகின்றோம். தான் சிலுவையில் பலியாவதை முன்னாலேயே காண்பிப்பதாக, இறுதி இரவு உணவின்போது அப்பத்தைப் பிட்டும் கிண்ணத்தில் இரசத்தை காணிக்கையாக்கியும் இந்த அருளடையாளத்தை நமக்கு வழங்கினார் இயேசுகிறிஸ்து. இந்த திருநற்கருணைப்பலி தியாகத்தில், இயேசுகிறிஸ்து, கருணைநிறை தந்தையாம் கடவுளுக்கான உன்னத நன்றியின் செபத்தை இவ்வாறு நமக்குத் தந்துள்ளார். நமதாண்டவரின் பாடுகள், மரணம், மற்றும் உயிர்ப்பின் நினைவாக இருக்கும் திருநற்கருணை, தன் அனைத்து மீட்பின் வல்லமையோடு பாஸ்கா மறையுண்மை பிரசன்னமாயிருக்க உதவுகிறது. நாம் இறைவனை நேருக்கு நேராகச் சந்திக்கும்போது இடம்பெறும் வானகப் பெருவிருந்தை முன்பே சுவைத்துப்பார்க்கும் வாய்ப்பை நமக்கு வழங்கும் இந்த திருநற்கருணை எனும் அருளடையாளத்திற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். நம் வாழ்வையும் நம் சமூகங்களையும் நல்வழிப்படுத்த, இந்த புனித அருளடையாளத்தில் எப்போதும் பிரசன்னமாயிருக்கும் நமதாண்டவரை நோக்கி வேண்டுவோம்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.