2014-02-05 15:33:42

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள தவக்காலச் செய்தியை வெளியிட்ட கர்தினால் Robert Sarah


பிப்.05,2014. வறியோருடன் தன்னை இணைத்துக்கொள்ளும் வறியத் திருஅவை என்ற கருத்து, திருத்தந்தையின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கருத்து என்றும், இக்கருத்து, அவர் வழங்கியுள்ள தவக்காலச் செய்தியில் மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது என்றும் கூறினார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
மார்ச் 5ம் தேதி துவங்கவிருக்கும் தவக்காலத்தையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள தவக்காலச் செய்தியை, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகள் அவையான “Cor Unum” அவையின் தலைவர், கர்தினால் Robert Sarah அவர்கள், பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று, செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்திய வேளையில் இவ்வாறு கூறினார்.
பொருளாதார அடிப்படையில், நன்னெறியின் அடிப்படையில் மற்றும் ஆன்மீக அடிப்படையில் வறுமை இவ்வுலகில் பெருகி வருகிறது என்பதை திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் என்பதை கர்தினால் Sarah அவர்கள் விளக்கினார்.
இறைவனுடன் கொள்ளும் உறவு, மனித வாழ்வின் மிக அடிப்படையான உண்மை என்பதை இவ்வுலகம் மறுத்து, வேறு வழிகளில் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்க முயல்வது மனிதர்களை மேலும் வறுமைக்கும், வெறுமைக்கும் அழைத்துச் செல்கிறது என்ற எண்ணம் இச்செய்தியில் வெளியாகிறது என்று கர்தினால் Sarah அவர்கள் சுட்டிக் காட்டினார்.
செய்தியாளர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஹெயிட்டி நாட்டில் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டுள்ள Davide Dotta, Anna Zumbo ஆகிய இரு பொது நிலையினரும் கலந்துகொண்டனர்.
திருத்தந்தையின் பெயரால் “Cor Unum” அவை வழங்கிய நிதி உதவியுடன் ஹெயிட்டியில் கட்டப்பட்டுள்ள ஒரு பள்ளியை மார்ச் மாதம் தான் திறக்கவிருப்பதாக, கர்தினால் Sarah அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.