2014-02-05 14:27:36

அமைதி ஆர்வலர்கள் – 1905ல் நொபெல் அமைதி விருது


பிப்.05,2014. 1905ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவர் Bertha Felicie Sophie von Suttner(ஜூன்9,1843-ஜூன்21,1914). செக் குடியரசின் பிரேக் நகரில் அரச பரம்பரைக் குடும்பத்தில் 1843ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பிறந்தார் பெர்த்தா. முடியாட்சி சமூகத்தைச் சேர்ந்த Bertha von Suttner தனது வாழ்வின் பாதிப் பகுதியை எந்தவிதக் கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் இராணுவ நடவடிக்கை மரபுகளை ஏற்றுக் கொண்டார். ஆனால் இவர் தனது வாழ்வின் அடுத்த பகுதியில் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்தார். இளம் வயதில் பல மொழிகளைக் கற்றார். இசை மீதிருந்த தாகத்தால் இசையையும் கற்றார். இசைக் கச்சேரிகளில் பங்கெடுத்தார். பல பயணங்களை மேற்கொண்டு சமூக வாழ்விலும் விறுவிறுப்புடன் செயல்பட்டார். பெர்த்தா தனது 30வது வயதில், தாயின் ஊதியத்தைச் சார்ந்து வாழாமல் தனது சொந்தக் காலில் நிற்கவேண்டுமென்று உணர்ந்ததால், வியன்னாவில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். Suttner என்பவரின் குடும்பத்தில் நான்கு மகள்களுக்கும் ஆசிரியராகவும், அவர்களைக் கவனித்துக்கொள்பவராகவும் பணி செய்தார் பெர்த்தா. இங்குதான் பெர்த்தா தனது வருங்கால வாழ்க்கைத் துணைவரான அக்குடும்பத்தின் இளைய மகனைச் சந்தித்தார். 1876ம் ஆண்டில் பாரிஸ் சென்று ஆல்பிரட் நொபெலுக்குச் செயலராகப் பணியைத் தொடங்கினார் பெர்த்தா.
இப்பணியை சிறிது காலமே செய்த பின்னர் மீண்டும் வியன்னா திரும்பி, தான் முன்னர் வேலை செய்த Suttner குடும்பத்தில், Arthur Gundaccar von Suttner என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆயினும் இத்திருமணத்தை Suttner குடும்பத்தினர் விரும்பாததால், இந்த இளம் தம்பதியர் உடனடியாக Caucasus சென்று அங்கு ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தனர். மொழிகள் கற்பிப்பது, இசை வகுப்புகள் எடுப்பது, எழுத்துப் பணி போன்றவை மூலம் இவர்கள் வாழ்க்கை நடத்தினர். இக்காலத்தில் தங்களின் வாழ்வை கவிதை வடிவில் விளக்கும் ஒரு நூல், நான்கு புதினங்கள், ஓர் ஆன்மாவின் கண்டுபிடிப்பு என்ற புத்தகம் போன்றவற்றை வெளியிட்டார் பெர்த்தா. இவரும் இவரது கணவரும் சேர்ந்து, டார்வின், ஸ்பென்சர் போன்ற புரட்சிகர எழுத்தாளர்களை வாசித்ததன் பலன்களை இவரது நூல்கள் வெளிப்படுத்தின. அதோடு, சமுதாயம் அமைதியை அடைவதற்கான கருத்துக்களும் இந்நூல்களில் வெளிப்பட்டன. 1885ம் ஆண்டில் Suttner குடும்பத்தினர் இவர்களை ஏற்றுக்கொண்டதால் இத்தம்பதியர் மீண்டும் ஆஸ்ட்ரியா சென்றனர். அங்குதான் பெர்த்தா பல புதினங்கள் உட்பட பல நூல்களை எழுதினார். எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெர்த்தா தம்பதியர் ஒரு நண்பர் மூலமாக இலண்டனிலிருந்த அனைத்துலக அமைதிக் கழகம் பற்றியும், அதே மாதிரியாக உலகில் இயங்கிய பிற குழுக்கள் பற்றியும் அறிய வந்தனர். இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதி காணலாம் என்பதை அறிய வந்தனர். எனவே இயந்திர காலம்[Das Maschinenzeitalter] என்ற தலைப்பில் மற்றுமொரு அரிய நூலை 1889ம் ஆண்டில் வெளியிட்டார் பெர்த்தா. இந்தப் புத்தகம் பெருமளவில் விவாதத்துக்கு உட்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டது. மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதம், ஆயுதங்கள் ஆகியவற்றின் பலன்களை இந்நூல் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதற்குப் பின்னர் ஒரு புதினம் எழுதத் தொடங்கினார் பெர்த்தா. இந்தப் புதினத்தின் கதாநாயகி போரின் அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்தவராகச் சித்தரிக்கப்பட்டிருந்தார். இதன்விளைவாக, 1889ம் ஆண்டில் உங்கள் ஆயுதங்களைக் கைவிடுங்கள்[Die Waffen nieder] என்ற தலைப்பில் தனது அடுத்த நூலை வெளியிட்டார் பெர்த்தா. இராணுவ நடவடிக்கைகளை வன்மையாய்க் கண்டித்தார். இந்நூல் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பின்னர் பெர்த்தா அமைதி இயக்கத்தில் உயிர்த்துடிப்புள்ள தலைவராக மாறினார். அமைதி குறித்த கட்டுரைகள் எழுதுவது, அமைதி பற்றிய அனைத்துலகக் கூட்டங்களில் கலந்துகொள்வது, அமைதிக் குழுக்கள் உருவாக உதவுவது, அதற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது, சொற்பொழிவாற்றுவது, உலகெங்கும் அமைதித் திட்டங்களை ஊக்குவிக்க மக்களோடு தொடர்புகொள்வது போன்றவற்றில் தனது நேரத்தின் பெரும்பகுதியையும் சக்தியையும் செலவழித்தார். பெர்த்தா நீண்டகாலம் தலைவராக இருந்த ஆஸ்ட்ரிய அமைதிக் கழகத்தின் முயற்சியினால் 1891ம் ஆண்டில் வெனிஸ் அமைதிக் கழகம் உருவாக உதவினார். 1892ம் ஆண்டில் A. H. Fried என்பவரோடு சேர்ந்து Die Waffen Nieder என்ற அமைதி குறித்த இதழைத் தொடங்கினார். ஆல்பிரட் நொபெலுக்கு அமைதி இயக்கத்தின் முன்னேற்றங்கள் பற்றி அறிவித்துக்கொண்டே இருந்தார் பெர்த்தா. ஆல்பிரட் நொபெல், பெர்த்தாவுக்கு 1893ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில், அமைதி விருது வழங்கும் தனது திட்டத்தை குறிப்பிட்டிருந்தார்.
பெர்த்தாவும் அவரது கணவரும் 1899ம் ஆண்டில் Hague அமைதிக் கருத்தரங்கு நடைபெற கடுமையாய் உழைத்தனர். ஆயினும் 1902ம் ஆண்டில் பெர்த்தாவின் கணவர் இறந்தார். இத்துன்பம் அவரை வாட்டினாலும் அமைதிக்கான தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். வியன்னாவில் ஓய்வுபெற்ற பின்னர், அமைதிப் பணிகளில் மட்டும் ஈடுபட்டார் பெர்த்தா. 1905ம் ஆண்டில் நடைபெற்ற அமைதிக் கருத்தரங்கில் ஆங்கிலேயரும் ஜெர்மானியர்களும் ஒப்புரவடைய பெர்த்தா வழியமைத்தார். இதே 1905ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதையும் பெற்றார் Bertha Felicie Sophie von Suttner. இதற்குப் பின்னரும் தனது அமைதிப்பணியை இவர் கைவிடவில்லை. சீனா இராணுவமயமாகி வந்ததன் ஆபத்துக்களை எச்சரித்தார். உலகில் போர் விமானங்கள் பெருகி வருவதை எதிர்த்தார். பல கட்டுரைகளையும் எழுதினார், சொற்பொழிவுகளை நிகழ்த்தினார், பேட்டிகள் கொடுத்தார். 1908ம் ஆண்டில் இலண்டன் அமைதிக் கருத்தரங்கில் உரையாற்றினார். ஐரோப்பா முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் பேராபத்துக்கள் நடக்காமல் தடுக்கலாம் என்பதை அடிக்கடி சொல்லி வந்தார். உலகின் அமைதிக்காகக் கடுமையாய் உழைத்த பெர்த்தா, 1914ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி இறந்தார். முதல் உலகப் போர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர் இறந்தார். இந்தப் போர் குறித்தே பெர்த்தா அடிக்கடி எச்சரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.