2014-02-04 16:07:39

புற்றுநோய்க்கான சிகிச்சையினால் மட்டும் அந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது, ஐ.நா.


பிப்.04,2014. உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, தற்போது ஒரு கோடியே 40 இலட்சமாகவுள்ள இந்நோயாளரின் எண்ணிக்கை, அடுத்த 20 ஆண்டுகளில் 2 கோடியே 20 இலட்சமாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதேநேரம், ஆண்டுதோறும் புற்றுநோயால் இறப்பவரின் எண்ணிக்கையும் 82 இலட்சத்திலிருந்து 1 கோடியே 30 இலட்சமாக உயரும் எனவும், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஐ.நா. புற்றுநோய் நிறுவன இயக்குனர் Christopher Wild கேட்டுள்ளார்.
மேலும், உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து ஏறத்தாழ அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக நலவாழ்வு நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றைச் சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக நலவாழ்வு நிறுவனம், புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாக:
புகை பிடித்தல், கிருமித்தொற்று, மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல், சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசு கேடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள், தாய்மைப் பேறு தாமதமாவது, குழந்தைகள் அதிகம் பெறாமல் தவிர்ப்பது, தாய்ப்பால் தராமலிருப்பது ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளது.
பிப்ரவரி 4 இச்செவ்வாய் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.