2014-02-04 16:07:09

திருத்தந்தை பிரான்சிஸ் : தம் பிள்ளைகளை அன்புகூரும் தந்தையாக, கடவுள்கூட கண்ணீர் வடிக்கிறார்


பிப்.04,2014. தம் பிள்ளைகளை அன்புகூரும் தந்தையாக, கடவுள்கூட கண்ணீர் வடிக்கிறார் என்றும், தம் பிள்ளைகள் புரட்சியாளர்களாக இருந்தால்கூட அவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை, ஆனால் தான் அவமானப்படுவதற்கும் பயப்படாமல், அவர்களைக் காப்பாற்றும்பொருட்டு, அவர்களுக்காக அவர் எப்போதும் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனக்கு எதிராகச் செயல்பட்ட தனது மகன் அப்சலோமின் இறப்புக்காக மன்னர் தாவீது கண்ணீர் வடித்ததை விவரிக்கும் இச்செவ்வாய் தின திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், தாவீது, நாட்டின் தலைவராகவும், நாட்டின் அரசராகவும் இருந்தாலும், அவர் தனது படையின் வெற்றியில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அவர் தனது மகனுக்காகக் காத்திருந்தார் என்று கூறினார்.
வத்திக்கான் புனித சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தனது மகன் தனது பகைவனாக, தனக்கு எதிரான புரட்சியாளனாக இருந்தபோதிலும், மகனின் இறப்புச் செய்தி கேட்டு தாவீது அழுதார், இதுதான் தந்தையின் இதயம் என்று கூறினார்.
மேலும், இந்நாளைய நற்செய்தி வாசகம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் ஒரு முக்கியமான மனிதராக இருந்தபோதிலும், தனது நோயுற்ற மகளுக்காக இயேசுவின் பாதத்தில் விழுவதற்கு அவர் வெட்கப்படவில்லை என்றும், யாயீரும் தாவீதும் தந்தையர் என்றும் கூறினார்.
துன்பவேளைகளில் தந்தை பதில் சொல்கிறார் என்பதற்கு விவிலியத்தில் பல மேற்கோள்களைக் காட்டிய திருத்தந்தை, கண்ணீர் வடித்த தாவீது, தனது மகளுக்காக இயேசுவின் காலடியில் வீழ்ந்த தொழுகைக்கூடத் தலைவர் ஆகிய இரு உருவங்கள் குறித்து இன்று சிந்திப்போம் என்றும் கூறினார்.
நம் இயத்திலிருந்து தந்தையை கடவுள் என்று சொல்ல இயவலுவதே அருள்தான், இது தூய ஆவியின் அருள், இவ்வருளுக்காகச் செபிப்போம் எனவும் கூறி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.