2014-02-03 14:57:49

வாரம் ஓர் அலசல் - மனித வாழ்வின் புனிதம் காப்போம்


பிப்.03,2014. RealAudioMP3 நான்காம் வகுப்பு படிக்கும் Tyler Doohan என்ற 8 வயது சிறுவன், தீ விபத்திலிருந்து 6 பேரைக் காப்பாற்றினான். மேலும் ஒருவரைக் காப்பாற்ற முனைந்தபோது தீச்சுடரில் அவனும் கருகிப் போனான். கடந்த மாதத்தில் (சன.21,2014) யாகூ ஊடகத்தில் இச்செய்தி பதிவாகியிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் நகரிலுள்ள Tylerன் தாத்தா Louis Beachன் வீடு அதிகாலை 4.45 மணியளவில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை அறியவந்த சிறுவன் Tyler, உடனடியாக செயலில் இறங்கி அவ்வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உறவினர்களைக் காப்பாற்றியிருக்கிறான். தீக் காயங்களுடன் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் பணியில் அச்சிறுவனும் இறந்துவிட்டான். அந்தத் தீ விபத்தில் இறந்த அவனது தாத்தா Beach மற்றும் மாமா Steve Smithன் படுக்கைகளுக்கு அருகில் Tylerன் உடல் கிடந்ததாக அச்செய்தியில் சொல்லப்பட்டிருந்தது. மனித உயிர், மனித வாழ்வு மகத்தானது என்பதை 8 வயது சிறுவன் Tyler தனது தியாகத்தால் உணர்த்திவிட்டான். வலைத்தளத்தில் இச்செய்தியை வாசித்து இந்தச் சிறுவனை மனதார வாழ்த்திக்கொண்டிருந்தபோது, “பாறையாகிப் போனது தாயின் மனசு, மகளுக்கு சூடுவைத்து கொடுமை” என்று, தடித்த எழுத்துக்களில் இஞ்ஞாயிறு தினமலரில் வெளியான ஒரு செய்தியையும் வாசிக்க நேர்ந்தது.
தமிழ் நாட்டின் விருதுநகரில் அய்யனார் நகரை சேர்ந்த பார்வதி, ஒரு பட்டாசு ஆலைத் தொழிலாளி. பார்வதியின் எட்டு வயது மகள் கார்த்திகா, இவரின் முதல் கணவருக்குப் பிறந்தவர். முதல் கணவர் இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பார்வதி. இத்தம்பதியருக்கு, மாரீஸ்வரி என்ற 5 வயது மகள் இருக்கிறார். கார்த்திகா, குந்தலப்பட்டி விடுதிப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தார். அண்மையில், அப்பள்ளி மூடப்பட்டதால், விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். கார்த்திகாமீது வெறுப்படைந்த தாய் பார்வதி, அவ்வப்போது சூடுபோட்டு கொடுமைப்படுத்தினார். இந்நிலையில் கார்த்திகா, தன் பாடப் புத்தகத்தை விற்று, 'ஐஸ் கிரீம்' வாங்கி சாப்பிட்டார் என்பதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தோசைக் கரண்டியால், கை, காலில் சூடு வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினரின் முயற்சியால், பொதுநல அமைப்பினரால் மீட்கப்பட்ட சிறுமி கார்த்திகா, தற்போது சிறார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். தனது தாயிடம் செல்ல விருப்பமில்லை என்று உறுதியாகச் சொல்லியுள்ளார் கார்த்திகா.
8 வயது சிறுவன் Tyler Doohanக்குத் தெரிந்த மனித வாழ்வின் மகத்துவம், பத்து மாதம் சுமந்து பாலூட்டி வளர்த்த தாய் பார்வதிக்குத் தெரியாமல் போய்விட்டது. பிப்ரவரி 2, இஞ்ஞாயிறன்று பிலிப்பின்சிலும், இத்தாலியிலும் மனித வாழ்வு தினம் சிறப்பிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதையுமே மனித வாழ்வுக்கென அர்ப்பணித்து, மனித வாழ்வுக்கு ஆதரவான பல நடவடிக்கைகளைச் செய்வதற்கு, பிலிப்பின்ஸ் கத்தோலிக்கத் திருஅவை திட்டமிட்டுள்ளது. இந்த மனித வாழ்வுக்கு ஆதரவான தினத்தை இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், மனித வாழ்வு, தாயின் கருவிலிருந்து அது இவ்வுலகில் இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாக்கப்பட்டு அன்புசெய்யப்பட்டு மதிக்கப்பட வேண்டும், குறிப்பாக, மனித வாழ்வு ஆபத்தில் இருக்கும்போதும், அதற்குச் சிறப்புக் கவனம் தேவைப்படும்போதும் அதற்குச் சேவை செய்வதற்கு ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் RealAudioMP3 . பிரான்சின் பாரிஸ் நகரில் கடந்த சனவரியில் மனித வாழ்வுக்கு ஆதரவாக, மாபெரும் பேரணி நடந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர். அண்மை பல ஆண்டுகளாக பல பணக்கார நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகின்றன, அதேநேரம், தாயின் கருவறைகளே கல்லறைகளாக மாறும் நிலையும் அதிகரித்து வருகின்றது. உலகில் ஓராண்டில் ஏறக்குறைய 4 கோடியே 50 இலட்சம், தினமும் 1 இலட்சத்து 26 ஆயிரம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் தினமும் நான்காயிரம் என, கருக்கலைப்புகள் செய்யப்படுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இந்நிலை வருங்காலம் குறித்த கவலையை, பல சமூக ஆர்வலர்களுக்குத் தந்துள்ளது.
இஸ்பெயின் அரசு கொண்டுவந்துள்ள கடுமையான கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் மத்ரித்தில் கடந்த வார இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். கருக்கலைப்பு செய்வதற்கு பெண்களுக்கு இருக்கும் உரிமையைக் கட்டுப்படுத்துவதாக இப்புதிய சட்டம் இருப்பதாக இப்பேரணியில் கலந்துகொண்டோர் குறை கூறியுள்ளனர். இஸ்பெயின் அரசின் புதிய சட்டத்தில் பெண்கள் கருத்தரித்த 14 வாரங்களுக்குள் கருக்கலைப்பைக் கோரும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண்ணிற்கு கருவைச் சுமக்க முடியாத உடல்நலக் குறைவு இருந்தால் அல்லது பாலியல் வன்செயல்மூலம் கருவுற்றிருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். இத்தாலி போன்ற நாடுகளில் பேருந்துகளில், மக்கள் செல்ல நாய்களைத் தூக்கிக்கொண்டு வருவதையும், அவற்றோடு பேசுவதையும், அந்தச் செல்லங்களை சகப் பயணிகள் கொஞ்சுவதையும் பார்க்கும்போது, மனித வாழ்வு இனிவரும் காலங்களில் எப்படி மதிக்கப்படுமோ என்ற கேள்வி எழுகின்றது.
அதேசமயம், குணமாக்கக்கூடிய மற்றும் பிற நோய்கள், பசி, பட்டினி, சண்டைகள், அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றால் பல மனித உயிர்கள் தினம் தினம் பலியாகி வருகின்றன, மனித வாழ்வு கேலிக்கூத்தாகியுள்ளது. அண்மை பல வாரங்களாக உள்நாட்டுச் சண்டை இடம்பெற்ற தென் சூடானில் 37 இலட்சம் பேர் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் Toby Lanzer கூறியுள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில் ஏறக்குறைய 11 ஆயிரம் பேர், திட்டமிட்டு சித்ரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று பிபிசி செய்திகள் கூறுகின்றன. அதேநேரம், சிரியாவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு ஜெனீவாவில் கடந்த வாரத்தில் நடந்து முடிந்துள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை என்றே தெரிகின்றது. இன்று உலகில் இடம்பெறும் இறப்புக்களுக்கு முக்கிய காரணமாக புற்றுநோய் உள்ளது என்றும், 2008ம் ஆண்டில் 76 இலட்சம் பேர் புற்றுநோயால் இறந்தனர், இவ்வெண்ணிக்கை, மொத்த இறப்புக்களில் ஏறக்குறைய 13 விழுக்காடு என்றும் ஐ.நா. புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உடற்பயிற்சியின்மை, பழங்களும் காய்கறிகளும் உணவுப் பழக்கத்தில் குறைபடுவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாமை, மது அருந்துதல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துதல் போன்றவை புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழன் தொலைக்காட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி, சில பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. RealAudioMP3
பிப்ரவரி 4, இச்செவ்வாய் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம். புற்றுநோய்க் குறித்த போலியான கற்பனைகள் அகற்றப்பட வேண்டும் என்ற தலைப்புடன் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாளுக்கென ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் இடம்பெறும் புற்றுநோய் இறப்புக்களுள் ஏறக்குறைய 22 விழுக்காடு புகையிலை தொடர்பான புற்றுநோய் என்றும், 71 விழுக்காடு நுரையீரல் புற்றுநோய் என்றும் கூறியுள்ளது. தற்போது புற்றுநோய் இறப்புக்கள் உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், புற்றுநோய்களால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் 1 கோடியே 30 இலட்சம் பேர் இறப்பார்கள் எனவும் ஐ.நா. கணித்துள்ளது.
அன்பு நேயர்களே, மனித வாழ்வு பற்றிய அலட்சியப் போக்கால் மனித உயிர்கள் பலவாறு இழக்கப்படுகின்றன. ஒரு சமயம் இளைஞன் ஒருவன், இந்த உலகமே துன்பமயமாக இருக்கிறது. அதை இன்பமாக மாற்றுவதே என் இலட்சியம் என்ற எண்ணத்துடன் பயணம் மேற்கொண்டான். வழியில் ஒரு பெரியவரைக் கண்டு ஆலோசனை கேட்ட அந்த இளைஞனுக்கு, அவர் கதை ஒன்று சொன்னார். இதோ அந்தக் கதை...
அது காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலம். அக்காலத்தில் ஒருநாள் அரசர் ஒருவர் கரடு முரடான காட்டுப் பாதை வழியே வேட்டைக்குச் சென்றார். வழியில் காலில் முள் குத்தியது. உடனே அரசர் அமைச்சரிடம், நீங்கள் நம் படைவீரர்களை அழைத்து, இந்தக் காட்டிலுள்ள மாடுகளையெல்லாம் வேட்டையாடச் சொல்லுங்கள் என்றார். எதற்காக இந்தத் திடீர் முடிவு என்று அமைச்சர் கேட்க, பாதையெல்லாம் முள். கரடு முரடாகவும் இருக்கின்றது, அதனால் நம் நாடெங்கும் மாட்டுத்தோல் கம்பளத்தை விரிக்கப் போகிறேன் என்றார் அரசர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த துறவி ஒருவர், சிரித்துக்கொண்டே, அரசே, இதற்காக ஏன் இவ்வளவு வீண் செலவு, உமது பாதங்களைக் காக்க இரண்டு துண்டு மாட்டுத்தோல் போதுமே என்றார். அரசரும் தனது முடிவை மாற்றினார். உலகின் முதல் காலணியும் உருவானது.
பெரியவரே, இந்தக் கதைக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், எனது இலட்சியம் இதுவல்ல என்று அந்த இளைஞன் சொன்னதும், பெரியவரோ, தம்பி, உலகத்தைத் துன்பமற்ற இடமாக மாற்ற, முதலில் நீ உனது உள்ளத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமேயன்றி உலகத்தை அல்ல என்றார். ஆம். நாம் வாழும் இந்த உலகத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் முதலில் நம் ஒவ்வொருவரிலிருந்தே தொடங்க வேண்டும். அது முதலில் மனித வாழ்வையும், மனித உயிர்களையும் காப்பதாக, மதிப்பதாக, வரவேற்பதாக அல்லது அன்புகூருவதாக இருக்கட்டும். மாற்றத்தை விரும்பும் எவரும் முதலில் அதனை தன்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தாவரங்களுக்கும் நினைவாற்றல் இருப்பதாக, ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் அறிவித்திருக்கும் இவ்வேளையில், அன்பர்களே, மனிதர்களாகிய நாம் எதிலும் எந்நேரத்திலும் அதிக எச்சரிக்கையுடன் வாழ வேண்டாமா! எனவே விழிப்புடன் செயல்பட்டு மனித வாழ்வின் புனிதம் காப்போம்.








All the contents on this site are copyrighted ©.