2014-02-01 14:50:23

புனிதரும் மனிதரே - உலகப் பதவிகளைவிட...


1567ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர்குடும்பத்தில் பிறந்தவர் பிரான்சிஸ் டி சேல்ஸ். குடும்பத்தில் முதல் மகன் என்பதால், இவரது தந்தை, இவர் கல்வி பயில மிகச்சிறந்த பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தார். இவர் கல்வி பயின்ற காலத்தில், இயேசு சபையினரின் கண்காணிப்பில் வளர்ந்தார்.
பாரிஸ் பல்கலைக் கழகத்திலும், பின்னர் இத்தாலியின் பதுவை பல்கலைக் கழகத்திலும் பயின்ற இவர், தன் 25வது வயதில் சட்டவியலிலும், இறையியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். தந்தை இவருக்கென ஏற்பாடு செய்திருந்த பல உலகப் பதவிகளையெல்லாம் மறுத்துவிட்டு, குருத்துவ வாழ்வைத் தேர்ந்தார் பிரான்சிஸ்.
1602ம் ஆண்டு, தன் 35வது வயதில், பிரான்சிஸ் டி சேல்ஸ், ஜெனீவாவின் ஆயராகப் பொறுப்பேற்றார். ஆயர் இல்லத்தில் மிக எளிய வாழ்வை மேற்கொண்ட இவர், தன்னிடம் இருந்த செல்வங்களைக் கொண்டு ஏழைகளுக்கு அதிகமாக உதவிகள் செய்தார். இறைவார்த்தையைப் போதிப்பதில் ஈடு இணையற்றவராக விளங்கினார்.
1622ம் ஆண்டு நோயுற்று, டிசம்பர் 28ம் நாள் இவர் இறையடி சேர்ந்தார். இவரது புனித வாழ்வு பலரையும் இவர்பால் ஈர்த்தது. இவரது மரணத்திற்குப் பிறகு புதுமைகள் நிகழ்ந்தன. 1664ம் ஆண்டு திருத்தந்தை 7ம் அலெக்சாண்டர் அவர்கள், பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களை, புனிதராக உயர்த்தினார். 1877ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், இவரை, திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.