2014-02-01 14:50:12

திருத்தந்தை பிரான்சிஸ் : வானகத் தந்தையின் எல்லையில்லா நன்மைத்தனத்தையும் கருணையையும் அறிவியுங்கள்


பிப்.01,2014. வானகத் தந்தையின் எல்லையில்லா நன்மைத்தனத்துக்கும் கருணைக்கும் சாட்சிகளாய் வாழ்ந்து அவற்றை அறிவிக்குமாறு இத்தாலியின் Neocatechumens பக்த இயக்கத்தினரிடம் இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தொடக்ககாலக் கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Neocatechumens என்ற கத்தோலிக்கப் பக்த இயக்கத்தின் ஏறக்குறைய எட்டாயிரம் பேரை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமை நண்பகலில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், நம் தாயாகிய திருஅவையின் பெயரில் சில எளிய பரிந்துரைகளை முன்வைப்பதாகக் கூறினார்.
இந்தப் பக்த இயக்கத்தினர் மறைப்பணியாற்றும் இடங்களில் தலத் திருஅவைகளுடன் ஒன்றிப்பை ஏற்படுத்தி, மேய்ப்புப்பணியாளர்களின் வழிகாட்டுதலில் செயல்படுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பணியாளர்கள் செல்லுமிடமெல்லாம் தூய ஆவி இவர்களுடன் இருந்து வழிநடத்துகிறார் என்பதையும் நினைவுபடுத்தினார்.
அந்தந்த இடங்களின் மொழிகளைக் கற்பதற்கு இம்மறைப்பணியாளர்கள் எடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ள அதேவேளை, அந்தந்த இடங்களின் கலாச்சாரங்களைக் கற்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவர் ஒருவரோடு, குறிப்பாக, சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களோடு அன்புடன் வாழுமாறும் Neocatechumens இயக்கத்தினரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை, அவரை அறியாத இடங்களுக்கும் எடுத்துச்செல்லுமாறு ஊக்கப்படுத்தியதோடு, வானகத் தந்தையாம் இறைவனின் எல்லையில்லா நன்மைத்தனத்துக்கும் கருணைக்கும் சாட்சிகளாய் வாழுமாறும் பரிந்துரைத்தார்.
இச்சந்திப்பின்போது, இவ்வியக்கத்தின் 414 குடும்பங்களை ஆசீர்வதித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு, குறிப்பாக, ஆசியாவுக்கு, மறைப்பணியாளர்களாக அனுப்பினார் திருத்தந்தை.
இச்சந்திப்பில் இக்குடும்பங்களின் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பங்குகொண்டனர்.
Neocatechumens கத்தோலிக்கப் பக்த இயக்கம் 1960களில் இஸ்பெயினில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.