2014-02-01 14:50:27

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்து நமது பாவச்சுமையை அகற்றி அமைதி நல்குகிறார்


பிப்.01,2014. சில நேரங்களில் நம் பாவங்களின் பளுவால் நாம் வருத்தமடைகிறோம், ஆனால் மனந்தளரத் தேவையில்லை, ஏனெனில் கிறிஸ்து நமது பாவச்சுமையை அகற்றிட இவ்வுலகுக்கு வந்தார், அவர் நமக்கு அமைதி அருளுகிறார் என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 18வது அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினம் சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலி 50 இருபால் துறவியரின் பவனியோடு தொடங்கும். இவ்வாண்டு இப்பவனியில் இளம் துறவியர் கலந்து கொள்கின்றனர்.
1997ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியன்று அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினம் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இத்தினத்தை முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் உருவாக்கினார். ஆண்டவரை ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணித்த விழாவான பிப்ரவரி 2ம் தேதியன்று துறவிகள் தங்களின் அர்ப்பண வாழ்வுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.