2014-01-31 15:46:10

நவ.21,2014-நவ,21,2015 துறவிகள் ஆண்டு


சன.31,2014. 2014ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி முதல் 2015ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வரை கத்தோலிக்கத் திருஅவையில் அனைத்துலக துறவிகள் ஆண்டு சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்துலக துறவிகள் ஆண்டு குறித்து இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய, திருப்பீட துறவிகள் பேராயத் தலைவர் கர்தினால் Joao Braz De Aviz அவர்கள், இவ்வாண்டின் நோக்கத்தை எடுத்துச் சொன்னார்.
தழுவியமைத்துத் துறவற வாழ்வைப் புதுப்பித்தல் பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்வுத் தொகுப்பு Perfectae caritatis வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டை முன்னிட்டு 2015ம் ஆண்டு, அனைத்துலக துறவிகள் ஆண்டு எனச் சிறப்பிக்கப்படுகிறது என கர்தினால் De Aviz கூறினார்.
2013ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்கள் துறவு சபைகளின் 120 அதிபர்களை வத்திக்கானில் சந்தித்தபோது, 2015ம் ஆண்டு அனைத்துலக துறவிகளுக்கென அர்ப்பணிக்கப்படும் எனக் கூறியதைக் குறிப்பிட்ட, கர்தினால் De Aviz, 2015ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார்.
மேலும், இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீட துறவிகள் பேராயச் செயலர் பேராயர் José Rodríguez Carballo OFM, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி இந்தத் துறவிகள் ஆண்டைத் துவக்கி வைப்பார் என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளை உருவாக்கும் பொறுப்பில் உள்ளோர்க்கும், புகுமுகப் பயிற்சி நிலையில் இருப்போர் மற்றும் வார்த்தைப்பாடுகள் கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு உட்பட்ட இளையோர் ஆகியோர்க்கும் என, தனித்தனியாக அனைத்துலக அளவில் மாநாடுகள் இடம்பெறும் என்றும் அறிவித்தார்.
இவ்வாண்டில் துறவு சபைகளின் அதிபர்களுக்கும் அனைத்துலக அளவில் மாநாடுகள் நடைபெறும்.
2015ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருப்பலியுடன் இந்த அனைத்துலக துறவிகள் ஆண்டு நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.