2014-01-30 16:09:23

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையின் நன்னெறி படிப்பினைகளை இளையோர் மனங்களில் விதைப்பது கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் கடமை


சன.30,2014. திருஅவையின் நன்னெறி படிப்பினைகளை இளையோர் மனங்களில் விதைப்பதும், இவ்வுலகம் சொல்லித்தரும் பாடங்களுடன் திருஅவையின் படிப்பினைகளை சமரசம் செய்யாமல், அவற்றை நிலைநாட்டுவதும் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் தலையாயக் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அமெரிக்காவில் இயங்கிவரும் புகழ்பெற்ற Notre Dame du Lac பல்கலைக் கழகத்தின் கிளையாக, உரோம் நகரில் உருவாக்கப்பட்டுள்ள கல்வி மையம் ஒன்றின் திறப்பு விழாவுக்கு வந்திருந்த இப்பல்கலைக் கழகத்தின் அறக்கட்டளை உறுப்பினர்கள் 130 பேரை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
மறைபரப்புப் பணி என்பது கிறிஸ்தவராய் வாழும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கடமை என்று தனது Evangelii Gaudium திருத்தூது அறிவுரையில் கூறியதை நினைவுபடுத்தியத் திருத்தந்தை அவர்கள், இத்தகையப் பணியை நிறைவு செய்ய Notre Dame பல்கலைக் கழகம் செயலாற்றுகிறது என்பதைக் குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
அமெரிக்க நாட்டு வரலாற்றில், இளையோரை தகுந்த பாதைகளில் வழிநடத்த, Notre Dame பல்கலைக் கழகம் ஆற்றிவந்துள்ளப் பணிகளைப் பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து இப்பணிகளில் சிறந்து விளங்க அப்பல்கலைக் கழகத்தினர் அனைவருக்கும், சிறப்பாக, அங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் கூறினார்.
புனித சிலுவை துறவுக் குடும்பத்தைச் சேர்ந்த அருள் பணியாளர் Edward Sorin அவர்களால் 1842ம் ஆண்டு, அமெரிக்காவின் Indiana மாநிலத்தில் நிறுவப்பட்ட Notre Dame பல்கலைக் கழகத்தில் தற்போது 8000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.