2014-01-29 13:50:02

புனிதரும் மனிதரே:அடிமைத்தன ஒழிப்பில் முன்னோடி(புனித பத்தில்திஸ், பிரான்ஸ் அரசி)


641ம் ஆண்டில் டென்மார்க் இராணுவம் இங்கிலாந்தை ஆக்ரமித்தது. அச்சமயத்தில் அடிமையாகப் பிடிக்கப்பட்டு, பிரான்ஸ் அரசர் 2ம் குளோவிஸ்(Clovis II) என்பவரின் அரசவையில் தலைமை அதிகாரியாக இருந்த Erchinoald என்பவருக்கு விற்கப்பட்டவர் பத்தில்திஸ்(Bathildis). பத்தில்திஸ், தனது அடிமைப்பெண் வேலையை மிகவும் பணிவோடும் அடக்கத்தோடும் செய்து வந்ததுடன், உடன் பணியாளர்களின் காலணிகளைச் சுத்தம் செய்தல், அவர்களின் கிழிந்த ஆடைகளைத் தைத்துக் கொடுத்தல் போன்ற அன்புச் செயல்களால் அனைவரின் பாசத்தையும் பெற்றார். தன்னிலே அழகாகவும், அடக்கமாகவும் இருந்த பத்தில்திசின் சிறப்பான குணங்களால் கவரப்பட்ட அதிகாரி Erchinoald, பத்தில்திசை தனது மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார். இதையறிந்த பத்தில்திஸ், ஒரு வயதான பெண்போல் தன்னை மாற்றி அழுக்கான, நாகரீகமற்ற உடைகளை உடுத்திக் கொண்டார். அதோடு அந்த அரண்மனையில் மற்ற பணியாளர்கள் மத்தியில் தன்னை மறைத்துக் கொண்டார். பத்தில்திஸ் அரண்மனையைவிட்டு ஓடிவிட்டார் என்று நினைத்த Erchinoald, மற்றொரு பெண்ணை மணந்துகொண்டார். பின்னர் பத்தில்திஸ் தனது இயல்பான நிலைக்கு மாறி முன்புபோல் மற்றவர்முன் நடமாடத் தொடங்கினார். பிரான்ஸ் அரசர் குளோவிஸ், பத்தில்திசின் அழகிய தோற்றத்தையும் நற்பண்புகளையும் கவனித்து வந்தார். இந்த அடிமைப்பெண்ணை தான் அன்பு செய்வதாகவும் அறிவித்தார். 649ம் ஆண்டில் 19 வயதேயான அடிமைப்பெண் பத்தில்திசை திருமணம் செய்துகொண்டார் அரசர். இதன்மூலம் பத்தில்திஸ் பிரான்சின் அரசியானார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவரது கணவர் இறந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த பத்தில்திஸ், தனது அடிமை வாழ்வை மறக்காதவராய், அக்காலத்தில் அடிமைகள் மீட்கப்பட தனது அரசில் பெருமளவு நிதியை ஒதுக்கினார். பிரான்ஸ் மக்கள் தங்கள்மீது திணிக்கப்பட்ட வரிகளைச் செலுத்த இயலாமல் தங்கள் பிள்ளைகளை அடிமைகளாக விற்றதைக் கண்டு வரிகளைக் குறைத்தார். கிறிஸ்தவ அடிமைகள் விற்கப்படுவதை சட்டரீதியாகத் தடை செய்தார். பிரான்சில் காலடி எடுத்து வைக்கும் எந்த அடிமையும் விடுதலை பெறுவார் என அறிவித்தார் அரசி. இவ்வாறு அடிமைத்தனம் ஒழிக்கப்படுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் புனித அரசி பத்தில்திஸ். தனது மகனுக்கு வயது வந்தபோது அரச பதவியைக் கொடுத்துவிட்டு கன்னியர் இல்லத்தில் சேர்ந்தார் இப்புனிதர். இப்புனித அரசியின் விழா சனவரி 30.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.