2014-01-29 13:56:49

அமைதி ஆர்வலர்கள் – 1903,1904ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


சன.29,2014. 1903ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவர் William Randal Cremer(மார்ச் 18, 1828-ஜூலை 22, 1908). இவர், இங்கிலாந்தின் Fareham என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இரயில் பெட்டிகளுக்கு வர்ணம் பூசும் வேலை செய்துவந்த இவரது தந்தை, இவரது குடும்பத்தைக் கைவிட்டார். மனஉறுதி மிக்க இவரது தாய் இவரையும், இவரது இரு சகோதரிகளையும் கொடிய வறுமையில் வளர்த்தார். கிரேமெருக்கு 15 வயது நடந்தபோது இவர் தனது மாமாவுடன் சேர்ந்து கட்டட வேலை கற்றார். விரைவில் முழுநேர தச்சுவேலை செய்பவரானார். நேரம் கிடைத்தபோதெல்லாம் சொற்பொழிவுகளைக் கேட்டு கல்வியறிவை வளர்த்துக்கொண்டார் கிரேமர்(Cremer). ஒருமுறை இவர் அமைதி பற்றிய சொற்பொழிவைக் கேட்டார். அந்தச் சொற்பொழிவாளர், பன்னாட்டு அளவில் இடம்பெறும் பிரச்சனைகளை, பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டும் என்று கூறினார். இதை கிரேமர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறந்ததே கிடையாது. இவர் 1852ம் ஆண்டு இலண்டன் சென்றார். அங்கே 1858ம் ஆண்டில் அவரது நிர்வாகத் திறமை அங்கீகரிக்கப்பட்டது. ஒரு நாளில் 9 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று முயற்சிக்கும் கழகத்துக்கு, இவர் தனது 30வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டில் 70,000 தொழிலாளரை வழிநடத்தும் ஏழு பேர் கொண்ட குழுவில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தச்சுவேலை செய்பவர்க்கென தொழிற்சங்கம் உருவாகக் காரணமானார். அனைத்துலக உழைக்கும் ஆண்கள் கழகத்தை உருவாக்குவதிலும் பங்கெடுத்தார். ஆனால் பின்னாளில் அக்கழகம் புரட்சிக்குரிய சிந்தனையாளர்களை அதிகம் கொண்டிருந்ததால் அதிலிருந்து தனது ஆதரவை விலக்கிக் கொண்டார்.

ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தொழில்துறை உயிர்த்துடிப்புடன் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று கிரேமெர் விரும்பினார். கட்டாயக் கல்வி, நேரடியான வரிவிதிப்பு, நிலச்சீர்திருத்தம், தொழிற்சங்கங்களை நிர்வகிக்கும் சட்டங்களில் திருத்தம், தொழில் சார்ந்த நிர்வாகப் பிரச்சனைகளையும், நாடுகளுக்கிடையே எழும் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஒப்புரவு நீதிமன்றம் ஆகியவை குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறச் செய்தார். ஆயினும் இதில் இவர் இருமுறை தோல்வி கண்டார். மூன்றாவது தடவையாக, 1885ம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1886 மற்றும் 1892ம் ஆண்டுகளிலும் வெற்றி பெற்றார். ஆயினும் 1900மாம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது இறப்புவரை தொழிற்சங்கத் தலைவர் வேலையைச் செய்தார்.

பாராளுமன்றத்தில் உறுப்பினர் மற்றும் மதிப்புமிக்க தொழிற்சங்கத் தலைவர் என்ற தனது பதவியைப் பயன்படுத்தி, கிரேமெர் மனித சமுதாயத்தில் அமைதி நிலைபெற உழைத்தார். 1870ம் ஆண்டில் உழைக்கும் ஆண்கள் அமைப்பைத் தொடங்கினார். ப்ரெஞ்ச்-புருசியச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரிட்டன் சமநிலை வகிக்க வேண்டுமென வலியுறுத்தினார். இந்த உழைக்கும் ஆண்கள் அமைப்பு 1871ம் ஆண்டில் அனைத்துலக நடுநிலைக் கழகமாக மாறியது. கிரேமெர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் உறுப்பினராகச் சேர்ந்த ஈராண்டுகளுக்குப் பின்னர், 234 உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் பெற்று அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், பிரிட்டனுக்கும் இடையே இருந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டார். கிரேமெரின் இச்செயலால் கவரப்பட்ட Frédéric Passy மற்றும் ப்ரெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1888ம் ஆண்டில் கிரேமெரை பிரான்சுக்கு ஓர் ஆய்வுக் கூட்டத்துக்காக அழைத்தனர். இதன் விளைவாக, நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையே ஒரு கழகம் உருவானது. எட்டு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இக்கழகத்தின் முதல் கூட்டம் 1889ம் ஆண்டில் பாரிசில் நடந்தது. இக்கழக உதவித் தலைவராகவும், இதன் பிரித்தானிய கிளையின் செயலராகவும் கிரேமெர் நியமிக்கப்பட்டார். கிரேமெரின் இச்செயல்களே இவர் 1903ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெறக் காரணமானது. இவ்விருதில் கிடைத்த ஏறக்குறைய 8,000 பவுண்டுகளில் 7,000 பவுண்டுகளை இவர் செயலராக இருந்த கழகத்துக்குக் கொடுத்தார். பின்னாளில் 1,000 பவுண்டுகளையும் அதே கழகத்துக்குக் கொடுத்தார் கிரேமெர். இவரது முதல் மனைவி 1876ம் ஆண்டிலும், இவரது 2வது மனைவி 1884ம் ஆண்டிலும் இறந்தனர். கிரேமெருக்கு குழந்தைகள் இல்லை. எப்பொழுதும் தனி ஆளாகவே வாழ்ந்தார்.

கிரேமெர் 1903ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றார். இவருக்கு அடுத்து 1904ம் ஆண்டில், அனைத்துலக சட்ட நிறுவனம்(The Institut de droit international) நொபெல் அமைதி விருதைப் பெற்றது. இந்த அனைத்துலக சட்ட நிறுவனம், அனைத்துலக முன்னணி பொதுநல வழக்கறிஞர்களைக் கொண்ட அமைப்பாகும். Gustave Moynier, Gustave Rolin-Jaequemyns ஆகிய இருவரும் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற 9 வழக்கறிஞர்களுடன் சேர்ந்து பெல்ஜியத்தின் Ghent Town Hallலில் 1873ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இந்நிறுவனத்தை உருவாக்கினர். அனைத்துலக சட்டத் துறையில் குறிப்பிடத்தக்க திறமையான பணிகளைச் செய்பவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு இல்லாதவர்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாகச் சேரலாம். இந்த நிறுவனத்தின் பொதுச்செயலர் இருக்கும் இடத்தையொட்டி இதன் தலைமையகமும் இருக்கும். அனைத்துலக சட்டங்கள், அனைத்துலகப் பொருளாதாரம் மற்றும் பிற அனைத்துலக உறவுகள் சார்ந்த விவகாரங்களில் பயிற்சியும், பிற உதவிகளையும் அனைத்துலக சட்ட நிறுவனம் செய்கின்றது. அரசியல் கலப்பு இல்லாத இந்தத் தன்னார்வு நிறுவனம், 185க்கும் மேற்பட்ட நாடுகளின் 29 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள் என பலர் உறுப்பினர்களாக உள்ளனர். நாடுகளின் தலைவர்கள் நீதி விசாரணையிலிருந்து விலக்குப் பெறுவற்குத் தடை, சுற்றுச்சூழல் பாதிப்பில் அரசுகளின் பொறுப்பு உட்பட்ட பல முக்கிய பரிந்துரைகளை இந்நிறுவனம் உலகுக்கு முன்வைத்துள்ளது. மனித உரிமைகள் சட்டத்தைப் பாதுகாத்தல், நாடுகளின் பிரச்சனைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காணுதல் போன்ற அனைத்துலகச் சட்டங்களைச் சார்ந்து இந்நிறுவனம் எடுக்கும் தீர்மானங்களுக்காக, இதற்கு 1904ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது கிடைத்தது.







All the contents on this site are copyrighted ©.