2014-01-28 16:25:03

பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவது நிறுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்


சன.28,2014. பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவது நிறுத்தப்படுமாறு உலக நாடுகளை ஐ.நா. பாதுகாப்பு அவை இத்திங்களன்று வலியுறுத்தியுள்ளது.
அல்-கெய்தாவோடு தொடர்புடைய குழுக்கள் பிணையக் கைதிகளுக்கான ஈட்டுத்தொகையாக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 10 கோடியே 50 இலட்சம் டாலரைப் பெற்றுள்ளதாக, பிரித்தானிய ஐ.நா. தூதுவர் Mark Lyall Grant கூறினார்.
நைஜரில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட மூன்று ப்ரெஞ்ச் குடிமக்களுக்கான பிணையல் தொகையாக, கடந்த அக்டோபரில் 2 கோடி யூரோக்கள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும் இதற்கு பிரெஞ்ச் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடுகள் பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவதைத் தடைசெய்யும் ஒப்பந்தம், 2001ம் ஆண்டிலே கொண்டுவரப்பட்டது. இத்திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் சட்டரீதியான புதிய ஒழுங்குமுறைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: BBC








All the contents on this site are copyrighted ©.