2014-01-28 16:21:14

திருத்தந்தை - இறைப்புகழ்பாடி செபிப்பது இயல்பானது


சன.28,2014. இறைபுகழ்பாடி செபிப்பது என்பது இயற்கையாக எழக்கூடியது, அது நீதியானதும் கூட, என இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் திருப்பலி முதல் வாசக வார்த்தைகளை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கடவுளின் பேழை முன் தாவீது மன்னர் நடனமாடியதைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் புகழ் பாடி செபிப்பதற்கு தாவீது மேற்கொண்ட வழி இது எனக்கூறி, தன் முதிர்ந்த வயதில் தாய்மைப்பேற்றை வழங்கிய இறைவனை நினைத்து புகழ்ந்த சாரா 'தன்னை இறைவன் மகிழ்ச்சியால் நடனமாட வைத்தார்' எனக் கூறியதையும் தான் இப்போது நினைவுகூர்வதாக எடுத்துரைத்தார்.
இறைவனிடம் ஒன்றைக் கேட்பது, அவருக்கு நன்றியுரைப்பது, அவரை வணங்குவது போன்ற செபங்களை நாம் புரிந்து கொள்ளலாம், ஆனால் புகழ்பாடி செபிப்பது என்பது இயல்பாக வரக்கூடியது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உன்னதமான இறைவனை புகழ்ந்துபாடிச் செபிப்பது நியாயமானதும் கூட என்ற திருத்தந்தை அவர்கள், இறைவனைப் புகழ்ந்துபாடி செபிப்பது என்பது நம்மையும் வளமுள்ளதாக மாற்றுகின்றது என்றார்.
செபம் என்பது உற்சாகமற்ற ஓர் படிவத்திற்குள் அடக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பாக நம்மிடமிருந்து எழும் புகழ்மாலையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.