2014-01-27 16:00:50

திருத்தந்தையின் மூவேளை செப உரை


சன.27,2014. இயேசுவின் காலத்தில் பல கலாச்சாரங்கள், இனங்கள், மதங்கள் சந்திக்கும் இடமாக இருந்த கலிலேயாப் பகுதியிலிருந்து தன் பொதுவாழ்வை இயேசு துவக்கியது போல், நம்முன் விரிந்திருக்கும் இன்றைய உலகில் துணிவுடன் பணிகளை நாம் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்றைய கலிலேயா போல் இன்றையை உலகம் பல கலாச்சாரஙகள் மற்றும் கருத்து மோதல்களின் இடமாக உள்ளது என தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மோதல்களுக்குப் பயந்து, நாம் தடுப்புச்சுவர்களை எழுப்பி நம்மைப் பாதுகாக்கும் சோதனைக்கு உட்படக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் நற்செய்தி என்பது மனித சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே உரியதல்ல என்பதை தெளிவாக மனதில் கொண்டு அதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதிகம் படித்தவர்களையோ சட்டவல்லுனர்களையோ இயேசு தன் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக சாதாரண மக்களையேத் தேர்ந்தெடுத்து, நற்செய்தியை எடுத்துரைக்க அனுப்பினார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் நம் வாழ்வின் பாதைகளில் நடைபோடும் இயேசு, நம்மையும் அழைக்கிறார், அவரின் குரலுக்குச் செவிமடுத்து, துணிவுடன் பின்தொடர்வோம் என்றார்.
உலகில் ஒளியின்றி எப்பகுதியும் இருக்கக்கூடாது என்பதை மனதிற்கொண்டு, இயேசுவின் நற்செய்தி தரும் மகிழ்ச்சியை உலகம் முழுமைக்கும் எடுத்துச் செல்வோம் என்ற அழைப்பும் திருத்தந்தையால் விடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.