2014-01-27 16:01:20

உக்ரைன் நாட்டு அமைதிக்காகவும், தொழுநோயாளர் நலனுக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


சன.27,2014. இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையில் இயேசுவின் கலிலிலேயப்பணி துவக்கம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுரையின் இறுதியில், உக்ரைன் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார்.
அண்மை நாட்களில் உக்ரைன் நாட்டில் இடம்பெறும் போராட்டங்களில் உயிரிழந்துள்ள மக்களையும், அவர்களின் குடும்பங்களையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அந்நாட்டில் பொதுமக்கள் சமூகத்திற்கும், நிறுவனங்களுக்கும் இடையே பலன்தரும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அதன்வழி வன்முறைகள் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக தொழுநோயாளர் நாள் குறித்தும் தன் மூவேளைசெப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோயாளிகளின் எண்ணிக்கை உலகில் குறைந்துவருகின்றபோதிலும், ஏழ்மை நிலையில் வாழ்வோர் இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்டுவருவது குறித்தும் கவலையை வெளியிட்டு, இச்சகோதர சகோதரிகளோடு ஒருமைப்பாட்டை அறிவிக்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
சீனா, கொரியா, வியட்நாம் என தூர கிழக்கு நாடுகளில் வாழும் பல கோடி மக்கள், வரும் நாட்களில் தங்கள் புத்தாண்டை சிறப்பிக்கவுள்ளதை குறித்தும் எடுத்துரைத்து, அவர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.