2014-01-25 15:55:41

ஊழல் இல்லாத ஒரு நாட்டுக்காக உழைக்கும் நேர்மையான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்குமாறு இந்திய ஆயர்கள் வேண்டுகோள்


சன.25,2014. குற்றங்கள், பாகுபாடுகள் மற்றும் ஊழல் இல்லாத ஒரு நாட்டுக்காக உழைக்கும் ஆர்வமுள்ள மற்றும் நேர்மையான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் இந்திய ஆயர்கள்.
வருகிற மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதியும் அமைதியும் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்களின் உயிர்த்துடிப்புள்ள சமுதாய அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திறமையற்ற நிர்வாகம், நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்தல், இலஞ்சம், ஊழல் சீர்கேடுகள் போன்றவற்றால் தினமும் மக்கள் வேதனையும், மனக்கலக்கமும் அடைகின்றனர் எனவும், ஏழைகளுக்குச் சரியான விதத்தில் வளங்கள் பங்கிடப்படுவதை ஊழல் தடுக்கின்றது எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.
அனைத்துக் குடிமக்களும், பொது நலனை மேம்படுத்துவதற்காக, தாங்கள் ஓட்டளிக்க வேண்டிய கடமையையும், சட்டத்தையும் குறித்து அறிந்திருக்க வேண்டுமென்றும், ஒருங்கிணைந்த ஆளுமையும் ஞானமும் கொண்ட அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்குமாறும் இவ்வறிக்கை கேட்டுள்ளது.
இந்த அறிக்கையில், இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்களும், அப்பணிக்குழுவின் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.