2014-01-24 15:31:41

புனிதரும் மனிதரே. - இறைவன் என்னுடன் இருக்கும்போது அங்கு ஏழ்மையில்லை


மிகப்பெரும் பணக்கார பிரபுக்குடும்பத்தில் பிறந்த அந்தச் சிறுமி ஏழ்மை என்றால் என்னவெனத் தெரியாமல் வளர்ந்தவர். ஆனால் தனக்கெனக் கொடுக்கப்படும் உணவை, மறைத்து வைத்து யாருக்கும் தெரியாமல் ஏழைகளுக்குக் கொடுப்பதில் தனி இன்பம கண்டார். ஒரு நாள் துறவி ஒருவர் தன் தெரு வழியாக கிறிஸ்துவைக் குறித்துப் போதித்துக்கொண்டு போவதைக் கேட்டபோது, அந்த இளம்பெண்ணின் மனது இறைவன்பால் மேலும் ஈர்க்கப்பட்டது. தனக்கு 18 வயதானபோது, ஒரு குருத்து ஞாயிறு திருப்பலியில் ஆயர் தன்னிடம் குருத்தோலையை வழங்கியதும், மனதிற்குள் ஒரு தீர்மானம் பிறந்தது. தன்னை இறைவன் அழைக்கிறார் என உள்ளுணர்வுச் சொல்லியது. ஒருநாள் இரவு தன் உறவுப்பெண் ஒருவருடன் வீட்டைவிட்டு ஓடி, அன்றொரு நாள் தன் தெருவில் போதித்த துறவியைச் சென்றடைந்தார். அத்துறவி தான் அசிசியின் புனித பிரான்சிஸ். துறவியாவதற்கான விருப்பத்தை இந்த இளம்பெண் வெளியிட, அத்துறவி பிரான்சிஸ், இவரின் முடியை வெட்டி, அவருக்கு துறவிக்குரிய உடையை வழங்கினார். ஏழ்மை, பணிவு, தன்னையே ஒறுத்தல் என்பவைகளைத் தன் வாழ்வு மூலம் காட்டினார் இப்பெண்துறவி கிளாரா. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சாப்பிட்டார். அதுவும் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உண்டார். புலால் உணவை விலக்கி வைத்தார். தொடர்ந்து உண்ணா நோன்பை கடைப்பிடித்ததால் அவரின் உடல்நலம் குன்றியது. ஒருமுறை இவரின் துறவு இல்லத்திற்கு வந்த திருத்தந்தை 9ம் கிறகரி, இவரிடம், 'ஏழ்மைக் குறித்த உங்கள் கட்டுப்பாடுகளைச் சிறிது தளர்த்தலாமே' என அறிவுரை கூறினார். அதற்கு கிளாரா, 'என் பாவத்திலிருந்து நான் விடுதலைபெற ஆவல் கொள்கிறேன். ஆனால் இயேசுவைப் பின்பற்றும் என் கடமையிலிருந்து அல்ல' என்று அடக்கமாக பதிலுரைத்தார். இவரின் சகோதரி ஆக்னஸ், கடைசி சகோதரி பியாட்ரிஸ், இவரின் தாய், அத்தை என இவரின் உறவினர்களும் இவரின் சபையில் சேர்ந்து துறவிகளாயினர். உலகில் எதையும் சேர்த்து வைக்கவேண்டாம், இறைவனுக்காக அனைத்தையும் துறந்து, மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் என்பது இவரின் நோக்கமாக இருந்தது. இவ்வளவு ஏழ்மை வாழ்வு தேவையா என யாராவது கேட்டால், 'இறைவன் என் இதயத்தில் நிறைந்திருக்கும்போது அங்கு ஏழ்மை என்பது எப்படி இருக்க முடியும்' என்பார் அசிசியின் புனித கிளாரா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.