2014-01-23 16:00:43

உலகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, 'பிரான்சிஸ் தன்மை' கொண்டது - பேராயர் Maria Celli


சன.23,2014. உலகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, 'பிரான்சிஸ் தன்மை' கொண்ட ஆழமான கருத்துக்களை வெளியிட்டுள்ளது என்று திருப்பீட சமூகத் தொடர்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli அவர்கள் கூறினார்.
"உண்மையான சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவும் தொடர்பு" என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு ஜூன் 1ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்படவிருக்கும் 48வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியை இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட பேராயர் Maria Celli அவர்கள், இச்செய்தியின் முக்கிய எண்ணங்களைத் தொகுத்துக் கூறினார்.
மனித வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் கருவிகளின் பயன்பாடு வளர்ந்து வருவதை நன்கு உணர்ந்துள்ள திருத்தந்தை, இக்கருவிகளினால் நாம் ஆதிக்கம் செய்யப்படுவதைத் தவிர்த்து, இக்கருவிகளின் உதவியுடன் எவ்விதம் நமக்குள் உரையாடலை வளர்க்க முடியும் என்பதை தன் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று பேராயர் Maria Celli குறிப்பிட்டார்.
ஒரு குறுகிய வட்டத்திற்குள் தங்கிவிடாமல், சமுதாயத்தின் விளிம்புகளுக்கு செல்லவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவைக்கு அடிக்கடி அளித்துவரும் ஓர் உருவகம், அவர் வழங்கியுள்ள இச்செய்தியிலும் வெளியாகிறது என்று பேராயர் Maria Celli எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.