2014-01-23 16:01:30

இரண்டாவது ஜெனீவா பேச்சு வார்த்தைகளில், மக்கள் முதலிடம் பெறவேண்டும் - பேராயர் Silvano Tomasi


சன.23,2014. சிரியாவில் அமைதி நிலவ தற்போது மேற்கொள்ளப்படும் இரண்டாவது ஜெனீவா பேச்சு வார்த்தைகளில், வன்முறைகளில் பலியாகும் மக்கள் முதலிடம் பெறவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
‘இரண்டாவது ஜெனீவா அமைதிக் கருத்தரங்கு’ என்ற பெயரில் சனவரி 22, இப்புதனன்று சுவிட்சர்லாந்து, Montreux என்ற நகரில் துவங்கிய ஐ.நா. கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளச் சென்றுள்ள பேராயர் Silvano Tomasi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
சிரியா நாட்டில் ஈராண்டுகளாக நிலவிவரும் வன்முறைகளால் மூச்சடைத்து கிடக்கும் அந்நாட்டு மக்கள், துவங்கியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளால் ஓரளவு சுவாசிக்கும் நிலைக்கு கொண்டுவரப்படுவார்கள் என்று தான் நம்புவதாக, சிரியா நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
போர்களாலும், மோதல்களாலும் காயப்பட்டு, சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரோடும் திருப்பீடம் தன்னையே இணைத்துக் கொள்கிறது என்று ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Francis Chullikatt அவர்கள் ஐ.நா. அமர்வு ஒன்றில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.