2014-01-22 10:25:29

திருத்தந்தை பிரான்சிஸ் - செல்வம், மனிதர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும், அதிகாரம் செய்யக்கூடாது


சன.21,2014. இவ்வுலகில் உருவாக்கப்படும் செல்வம், மனிதர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும், மனிதர்களை அதிகாரம் செய்யக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 21, இச்செவ்வாய் மாலை சுவிட்சர்லாந்தின் Davos நகரில் "உலகை மறுவடிவமைத்தல்: சமுதாயம், அரசியல், வர்த்தகம் ஆகியவற்றில் தாக்கம்" என்ற மையக்கருத்துடன் துவங்கிய உலகப் பொருளாதார மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
சனவரி 25, வருகிற சனிக்கிழமை முடிய நடைபெறும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். திருஅவையின் சார்பில், திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, நைஜீரியா நாட்டின் கர்தினால் John Onaiyekan, மற்றும் டப்ளின் பேராயர் Diarmud Martin ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மனிதகுலத்தின் நலவாழ்வு, கல்வி, தொடர்பு வசதிகள் ஆகியவற்றில் வர்த்தக உலகம் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், இத்துறைகளில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கொடுக்கப்பாடாமல், வறியோர் பலர் இந்த வசதிகளிலிருந்து புறக்கணிக்கப்படுவதையும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மக்களையும் உள்ளடக்கக்கூடிய ஒரு சமுதாயக் கட்டுமானத்தை உருவாக்கும் கடமை, பொருளாதார வல்லுனர்களுக்கும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உள்ளது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
உலகில் ஒவ்வொரு நாளும் பெருமளவு உணவு வீணாக்கப்படும் அதேவேளையில், பல்லாயிரம் மக்கள் பசியால் இறப்பது குறித்தும், பாதுகாப்பான இடம்தேடி நாடுவிட்டு நாடு செல்லும் மக்கள் ஆபத்தான பயணங்களில் இறப்பது குறித்தும் திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
உலக பொருளாதார மாநாட்டின் தலைவரான பேராசிரியர் Klaus Schwab அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியினை, இச்செவ்வாய் மாலை, மாநாட்டின் துவக்க அமர்வில், கர்தினால் டர்க்சன் அவர்கள் வாசித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.