2014-01-22 16:18:05

இரண்டாம் ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் கிடைக்க சிரியா கிறிஸ்தவர்கள் செபம், உண்ணாநோன்பு


சன.22,2014. நம்பிக்கையின் அடிப்படையிலும், அடிப்படை மனித உரிமைகளின் அடிப்படையிலும் சிரியாவில் உருவாகவேண்டிய ஒப்புரவு ஒன்றே, இரண்டாம் ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைக் கொணரும் என்று தமாஸ்கு முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரி லஹாம் அவர்கள் கூறினார்.
சிரியாவில் நடைபெற்றுவரும் போரினை முடிவுக்குக் கொணரும் ஒரு முயற்சியாக, சனவரி 22, இப்புதனன்று சுவிட்சர்லாந்தின் Montreux என்ற நகரில் துவங்கியுள்ள ஒரு பன்னாட்டு கருத்தரங்கைக் குறித்து தன் கருத்தை வெளியிட்ட மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் மூன்றாம் கிரகோரி லஹாம் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் தீர்வுகள் கிடைக்கவேண்டுமென்ற விண்ணப்பங்களுடன் கிறிஸ்தவர்கள் செபம் மற்றும் உண்ணாநோன்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரி லஹாம் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையே, இப்புதன் காலையில் துவங்கிய கூட்டத்தில், சிரியாவில் போராடிவரும் இரு தரப்பினரின் பிரதிநிதிகளுக்கிடையே காரசாரமான குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டன என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / BBC








All the contents on this site are copyrighted ©.