2014-01-22 16:04:49

அமைதி ஆர்வலர்கள் – 1902ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


சன.22, 2014. மனச்சோர்வு பிற மனிதர்களிடமிருந்து வருவது போன்று நம்பிக்கையும் பிற மனிதர்களிடமிருந்து ஒருவருக்குக் கொடுக்கப்படலாம். இக்கூற்றை உதிர்த்தவர் Elie Ducommun(1833-1906). இவர் 1902ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவர். Elie Ducommunடன் சேர்ந்து Charles Albert Gobat(1843-1914) என்பவரும் நொபெல் அமைதி விருது பெற்றார். இவர்கள் இருவருமே சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த அமைதி ஆர்வலர்கள். Elie Ducommun ஒரு பத்திரிகையாளர் மற்றும் திறமையான சொற்பொழிவாளர். இவர் 1875ம் ஆண்டில் தொடங்கிய Jura-Bern-Lucerne Railway என்ற அமைப்பின் செயலராக பல ஆண்டுகள் பணியாற்றினார். இவர் தனது ஓய்வு நேரங்கள் அனைத்தையும் அமைதிக்கான நடவடிக்கைகளில் செலவழித்தார். ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் இயக்கத்தில் செயலூக்கத்துடன் ஈடுபட்டார். 1867ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அனைத்துலக அமைதி மற்றும் விடுதலை அமைப்பால் வெளியிடப்பட்ட“Les Etats-Unis d’Europe” அதாவது ஒன்றிணைந்த ஐரோப்பிய நாடுகள் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1891ம் ஆண்டில் அனைத்துலக அமைதிக் கழகத்தின் இயக்குனரானார். இரு வாரங்களுக்கு ஒருமுறை அக்கழகத்தின் இதழ் ஒன்றையும் Ducommun வெளியிட்டார். அமைதி இயக்கங்கள் தொடர்பான பல எழுத்துப் பணிகளுக்கு இவர்தான் ஆசிரியர். Elie Ducommun இறக்கும்வரை, அதாவது 1906ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதிவரை அனைத்துலக அமைதிக் கழகத்தை இவரே வழிநடத்தினார். உலகின் பல்வேறு அமைதிக் கழகங்களை ஒன்றிணைப்பதற்கு இவர் ஊக்கம் கொடுத்தார். பெர்ன் மற்றும் ஜெனீவாவின் அமைதி அமைப்புகளில் உறுப்பினராகவும் இவர் செயல்பட்டார். 1833ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி பிறந்த Elie Ducommun, 1902ம் ஆண்டின் அமைதி நொபெல் விருதைப் பெற்றார்.
1902ம் ஆண்டில் Elie Ducommunடன் அமைதி நொபெல் விருதை பகிர்ந்து கொண்டவர் Charles Albert Gobat. இவர் 1843ம் ஆண்டு மே 21ம் தேதி சுவிட்சர்லாந்தின் Tramelan எனுமிடத்தில் பிறந்தார். இவர் பிரிந்த கிறிஸ்தவ சபை போதகரின் மகன். மறைபோதகராகப் பணியாற்றிய பின்னர் எருசலேம் ஆயராகப் பொறுப்பேற்ற சாமுவேல் கோபாட் என்பவரின் மருமகன் இவர். Charles Albert Gobat ஒரு வழக்கறிஞர், அமைதி ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி. பேசில், ஹெய்டெல்பெர்க், பெர்ன், பாரிஸ் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற இவர், 1867ம் ஆண்டு ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியில் முனைவர் பட்டத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் அரசியலிலும், கல்வித்துறையிலும் ஈடுபட்டார். இவ்விரு துறைகளிலுமே சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். பெர்ன் மாவட்ட பள்ளிகளின் மேலாளராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். மெய்யியல் கல்வியிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த Gobat, அந்நாட்டின் கல்வி அமைப்பில் பல முக்கிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். மாணவர்கள் பல மொழிகளைக் கற்க ஊக்குவித்தார். 1900மாம் ஆண்டில் இவர் வெளியிட்ட சுவிட்சர்லாந்து மக்களின் வரலாறு என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.
Charles Albert Gobat, சுவிட்சர்லாந்து அரசியலிலும் பல முக்கிய பதவிகளை வகித்தார். சுவிட்சர்லாந்து மாநிலங்கள் அவையின் உறுப்பினராக 1914ம் ஆண்டில் அவர் இறக்கும்வரை பதவியில் இருந்தார். 1901ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Frédéric Passy, 1903ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற William Randal Cremer ஆகிய இருவரின் முயற்சிகளினால் உருவாக்கப்பட்ட IPU என்ற நாடுகளுக்கிடையேயான பாராளுமன்ற கழகத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றினார். இப்பணியின்போது, அமைதி இயக்கங்கள், பன்னாட்டு ஒப்புரவு, பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்புகள் ஆகியவற்றுக்காகச் செயல்பட்டார். இதனால் நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தினார். 1892ம் ஆண்டில் IPU கழகத்தின் நான்காவது மாநாட்டை பெர்ன் நகரில் கூட்டினார். இக்கழகத்தின் இயக்குனராக, 17 ஆண்டுகள் ஊதியமின்றி பணியாற்றினார். இவரோடு சேர்ந்து நொபெல் அமைதி விருது பெற்ற Ducommun இறந்த பின்னர் எட்டு ஆண்டுகளுக்கு அனைத்துலக அமைதிக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1916ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி, பெர்ன் நகரில் நடந்த அமைதி கருத்தரங்கு ஒன்றில் பேச எழுந்தபோது நிலைகுலைந்து, அதற்கு ஒருமணி நேரம் கழித்து மரணமடைந்தார் Charles Albert Gobat. நிரந்தர அனைத்துலக அமைதிக் கழகத்தில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் விதமாக நொபெல் அமைதி விருது Gobatக்கு வழங்கப்பட்டது.
இன்றையக் கற்பனை நாளைய நிஜமாக மாறலாம். வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்க்கு இது சாத்தியமாகும். இத்தகையவர்கள், அரசியலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றம் காண்பர். மாறாக, சோர்வுடன் தோல்வி மனப்பான்மையுடன் இருப்பவர்கள் நம்பிக்கையற்ற மனித குலத்துக்குள் நுழைவார்கள். அரசியல் பிரளயம், அரசியல் கொந்தளிப்புக்குள் அவர்களை இட்டுச்செல்லும். ஒருமைப்பாட்டுணர்வு உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்துவதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் 1902ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Charles Albert Gobat. இன்றும் பல நாடுகளில் அமைதி இல்லை. ஏறக்குறைய மூன்றாண்டுகளாக கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு இப்புதனன்று சுவிட்சர்லாந்து நாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் கூட்டமொன்றைத் தொடங்கியுள்ளனர். 2011ம் ஆண்டில் புதிய நாடாக உருவெடுத்த தென் சூடானில் இன்னும் அமைதி கிட்டவில்லை. அந்நாட்டுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்கு எத்தியோப்பியாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாட்டில் வாழ்பவரே ஒருவர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்கின்றனர். இந்தச் சகோதரக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். இச்செயலை இறைவன் வெறுக்கிறார்.
இறைவனோடு நல்லுறவுடன் வாழ்பவரே தன்னோடும், தான் வாழும் சமூகத்தோடும் அமைதியாக வாழ முடியும். நம்மை அழகிய உருவில் படைத்து சிந்திக்கும் ஆற்றலை வழங்கி, நமக்குப் பயன்படும்விதத்தில் இயற்கையை அமைத்து வாழ்வாதாரங்களை வழங்கிவரும் இறைவனை நினைவுகூராமல் மனிதர் அமைதியாக இயங்க முடியாது.








All the contents on this site are copyrighted ©.