2014-01-21 16:02:04

மியான்மாரில் கிறிஸ்தவர்களின் நிலங்களும் பள்ளிகளும் திருப்பி வழங்கப்படுமாறு அரசுக்கு கோரிக்கை


சன.21,2014. மியான்மாரின் கடந்தகால இராணுவ ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சபைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களும் பள்ளிகளும் திருப்பி வழங்கப்படுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் சார்லஸ் போ.
தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளுக்குமென இக்கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளார் பேராயர் போ.
மியான்மாரில் பல கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்களால் தொடங்கப்பட்டவை என்றும், கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில் கிறிஸ்தவர்கள் நாட்டுக்குச் செய்யும் சேவைகளை அங்கீகரிக்காமல் அந்நாட்டின் முந்தைய இராணுவ அரசு கிறிஸ்தவர்களின் நிலங்களையும், பள்ளிகளையும் பறிமுதல் செய்தது என்றும் உரைக்கும் பேராயரின் அறிக்கை, கிறிஸ்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் திருப்பி வழங்கப்படுமாறு அரசைக் கேட்டுள்ளார்.
மியான்மாரில் மதங்களுக்கிடையே, குறிப்பாக, பெரும்பான்மை புத்த மதத்தவருக்கும், சிறுபான்மை முஸ்லிம் மதத்தவருக்கிடையே ஆழமான பிரிவினைகள் காணப்படும்வேளை, அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் போ.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.