2014-01-21 16:00:43

சிரியாவுக்காகச் செபிக்குமாறு இங்கிலாந்து பேராயர் வேண்டுகோள்


சன.21,2014. சிரியாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இப்புதனன்று தொடங்கும் உலக நாடுகளின் பேச்சுவார்த்தை வெற்றியடையச் செபிக்குமாறு கேட்டுள்ளார் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் நிக்கோல்ஸ், பத்துப் பேருக்கு நால்வர் வீதம் நாட்டைவிட்டு வெளியேறக் காரணமாகியுள்ள சிரியாவின் சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு செபிக்க விண்ணப்பித்துள்ளார்.
சிரியாவில் போரிடும் குழுக்கள் மத்தியில் அமைதி நிலவுமாறு அந்நாட்டு ஆயர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருவதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் நிக்கோல்ஸ்.
மேலும், சிரியாவின் அமைதி குறித்து இம்மாதம் 22, இப்புதனன்று ஜெனீவாவில் தொடங்கும் பேச்சுவார்த்தையையொட்டி கூட்டம் நடத்திய உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், சிரியாவில் இடம்பெறும் சண்டைக்கு இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வு அல்ல என்றும், அப்பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு மனிதாபிமான உதவிகளுக்கு உறுதியளிக்குமாறு கேட்டுள்ளது.
இன்னும், சிரியாவில் ஏறக்குறைய மூன்றாண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையில் ஏறக்குறைய 11 ஆயிரம் கைதிகள் சித்ரவதைப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று இச்செவ்வாய் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.