2014-01-20 15:11:26

வாரம் ஓர் அலசல்–குழந்தைகள் நலமாய் வாழ...


சன.20,2014. பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம் பிரிவைச் சார்ந்த Aitzaz Hassan என்ற 15 வயது மாணவர் கடந்த வாரத்தில் அந்நாட்டின் ஹீரோவாக உயர்த்தப்பட்டுள்ளார். வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள Hangu மாவட்டம், முஸ்லிம் இனவாதப் பிரச்சனைகளாலும், அல்கெய்தா மற்றும் தலிபான்களின் உச்சகட்ட வன்முறை நடவடிக்கைகளாலும் நிறைந்துள்ள பகுதியாகும். இம்மாதம் 10ம் தேதி Aitzaz Hassan தனது பள்ளி நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது வெடிகுண்டுகள் நிரம்பிய ஆடையுடன் பயங்கரவாதி ஒருவர் பள்ளிக்குச் செல்வதை Hassan பார்த்தார். உடனடியாக, தனது உயிரையும் பொருட்படுத்தாது, விரைந்து சென்று, அந்தப் பயங்கரவாதியைப் பிடிக்க, அந்தத் தற்கொலைப் படைப் போராளி குண்டுகளை வெடிக்கச் செய்ய, அந்த ஆளும் Aitzaz Hassanம் இறந்துவிட்டனர். ஆனால் அந்தப் பள்ளியில் படித்த ஏறக்குறைய இரண்டாயிரம் மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த 15 வயது மாணவரின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டி பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sharif அம்மாணவருக்கு அந்நாட்டின் Sitara-e-Shujjat(star of bravery) என்ற சாதனையாளர் விருது வழங்கப்படுமாறு அரசுத்தலைவருக்குப் பரிந்துரைத்துளார் என்று செய்திகள் கூறுகின்றன. இதே பாகிஸ்தானில் Ahmadiyya முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த Muzaffar Ahmad என்ற மாணவர் 2010ம் ஆண்டு மே 28ம் தேதி, லாகூரில் நடைபெறவிருந்த தற்கொலைப் படைத் தாக்குதலிலிருந்து பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். அந்தப் போராளியால் தனக்குக் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார் Muzaffar Ahmad. இப்படி ஒரு தற்கொலைப் படைக் குண்டுதாரரை உயிரோடு பிடித்துக்கொடுத்த முதல் ஆள் Muzaffar Ahmad என்றும் பாராட்டப்பட்டுள்ளார்.

இதே பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1300 மாணவ மாணவியர் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி ஓவியத்தை வரைந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். லாகூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 7 மணி நேரத்தில் ஏறக்குறைய 42,000 சதுர அடி கொண்ட ஓவியத்தை இவர்கள் தீட்டியுள்ளனர். இப்படி எல்லா நாடுகளின் சிறாரும் பெரியோர் வியந்து போற்றும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆயினும் இச்சிறாரின் அடிப்படை உரிமைகள் பல நாடுகளில் பல வழிகளில் சுரண்டப்படுகின்றன. அன்பு நேயர்களே, ஐக்கிய நாடுகள் நிறுவனம் 17 வயதுக்குட்டபட்ட அனைவரையும் சிறார் என்று குறிப்பிடுகின்றது. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்களாக உள்ளனர் என்றும், அந்நாட்டில் அதிகரித்துவரும் வகுப்புவாதச் சண்டையால் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், படைப்பிரிவுகளில் சிறுமிகள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கடந்த வெள்ளியன்று ஐ.நா. எச்சரித்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கடந்த சனிக்கிழமை Twitter செய்தியில், போர்கள் பலரின் வாழ்வைச் சுக்குநூறாக்கியுள்ளன; தங்களின் குழந்தைப்பருவம் திருடப்பட்ட சிறாரைச் சிறப்பாக நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்தியாவில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைகள் என, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2011ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 43 ஆயிரத்து 338 சிறார், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாகவும், இது, ஆண்டுதோறும் 36 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னையை அடுத்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலே, அதிகளவுப் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 33,000 சிறார் குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, 2011ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் நிலவரப்படி, தமிழகத்தின் கோவை மகளிர் நீதிமன்றத்தில் 11 மாதங்களில் 60 சிறார் வழக்குகள் விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் இத்திங்களன்று தினத்தாள் ஒன்றில் வெளியானவை. வீட்டு வேலைக்காக, உத்தர பிரதேச மாநிலக் கிராமம் ஒன்றிலிருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்ட, 11 வயதுச் சிறுமியை, தொழிலதிபர் ஒருவரும், அவர் மனைவியும், பல மாதங்களாக அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன், சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்திய விவகாரம் இம்மாதம் 13ம் தேதியன்று தெரியவந்தது என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

இவ்விதம் உலகில் சிறார் எதிர்நோக்கும் உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி அதனை 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியன்று நாடுகளின் கையெழுத்துக்குச் சமர்ப்பித்தது. இந்த ஒப்பந்தம் 1990ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று அமலுக்கு வந்தது. சொமாலியா, அமெரிக்க ஐக்கிய நாடு, தென் சூடான் ஆகிய நாடுகள் தவிர 193 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதனை அமல்படுத்தி வருகின்றன. ஆயினும் சிறார்க்கெதிரான உரிமை மீறல்கள் குறைந்தபாடில்லை. இந்தியாவின் யூனிசெப் அதிகாரி வித்யாசாகர் அவர்கள், நாட்டில் குழந்தைகளின் நிலைமை பற்றியும், குடும்பங்களில் குழந்தை வளர்ப்புப் பற்றியும், சன் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

குழந்தைகளின் நிலைமை எல்லாத் தரப்புகளிலும் எப்படி உள்ளது எனச் சொல்கிறார் குழந்தைகள் நலன் சார்ந்த நூல்கள் எழுதியுள்ள விழியன் அவர்கள்...

இக்காலத்தில் பிள்ளைகள் மிக எளிதில் எதிர்த்துப் பேசுகிறார்கள், முரண்டுபிடிக்கிறார்கள் என்றெல்லாம் சில பெற்றோர் கவலைப்படுகின்றனர். இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளை வெளியே விளையாட விடவே பயமாக இருக்கிறது. அவர்கள் காணாமற்போகிறார்கள் அல்லது பிற பிள்ளைகளுடன் சேர்ந்து தீய பழக்கங்களைக் கற்றுவிடுகின்றனர் என்றும் சொல்கின்றனர். அதற்கு குழந்தை மனநல நிபுணர் மதுரை ராணி அவர்கள் சொல்கிறார் ...

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மட்டும் பொறுப்பல்ல, அவர்கள் சார்ந்துள்ள சமூகத்துக்கும் அக்கறை உள்ளது. கத்தோலிக்கத் திருஅவையும் சிறார் நலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. மேலும், உலகில் சிறாரின் உரிமைகள் குறித்த ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்து பரிசீலனை செய்வதற்காக கடந்த வியாழனன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், சிறார்க்கெதிரான வன்முறையும், சிறார் துர்ப்பிரயோகம் செய்யப்படுவதும் கடுமையான குற்றங்கள் என்றும், திருஅவையின் சில உறுப்பினர்கள் சிறாரைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் கொடுமையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முயற்சித்து வருகிறார் என்றும் கூறினார். திருஅவையில் சில அருள்பணியாளர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டது குறித்து வத்திக்கான் மிகவும் வருந்துகிறது எனவும், குழந்தைகளின் உரிமைகள் குறித்து திருப்பீடத்திற்குத் தரப்படும் அனைத்துப் பரிந்துரைகளையும் மனதார ஏற்பதற்கு திருஅவை தயாராக உள்ளது எனவும் உரையாற்றினார் பேராயர் தொமாசி. சிறாரின் மனித மாண்பு பறிக்கப்படுவது கடவுளின் கண்களுக்கு முன்னர் அச்சுறுத்தும் குற்றம் என திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதையும் பேராயர் தொமாசி குறிப்பிட்டார். மேலும், குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதில் திருஅவை எள்ளளவும் பின்வாங்காது என்பதை, திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி தெளிவுபடுத்தினார்

தீப்பட்டித் தொழிற்சாலைச் சிறார் இந்த உலகினரைப் பார்த்துச் சொல்வதாக எழுத்து.காம் என்ற இணையத்தில் புதுக்கவிதை ஒன்று இருந்தது. “உங்களின் பற்றாத தீக்குச்சிக்கு மட்டுமே என் படிப்பறிவின் வேதனை தெரிந்திருக்கும். எரியாத எங்கள் வாழ்க்கைக்காக இறந்துபோனதால்...” இன்று உலகில் பல சிறார் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படக் கூடாது, அவை பாதுகாக்கப்பட வேண்டுமென சமுதாயத்தில் மூத்தவர்களைக் கேட்கின்றனர். இவர்களுக்கு மூத்தவர்கள் சொல்லும் பதிலென்ன? இந்தியாவில் மட்டும் தெருக்களில் கைவிடப்பட்ட 2 கோடிச் சிறார் உள்ளனர்.

வானவியலில் திறமை பெற்ற சுவாமிஜி ஒருவர் வானத்தில் விண்மீன்களின் இயல்புகளையும் இருப்புநிலைகளையும் உணர்ந்திருந்தவர். ஒருமயம் காட்டுவழியே போன அவர் அந்த இரவில் தனது சீடர்களுக்கு வின்மீண்களின் போக்குகளை விளக்கிக்கொண்டே சென்றார். திடீரென அவரைக் காணவில்லை. மறைந்துவிட்டார். பாதையின் நடுவே இருந்த பள்ளத்திலிருந்து, ஐயோ என்னைத் தூக்கிவிடுங்கள் என்ற அபயக்குரல் வந்தது. அப்போது சீடர்கள், மேலே இருக்கிற விண்மீன்களின் போக்குகளைப் பக்குவமாய்ப் பார்த்துச் சொல்பவர் கீழே இருக்கிற சிறுகுழியைப் பார்க்கத் தவறிவிட்டாரே என்று முணுமுணுத்தனர். ஆம். அண்ணாந்து பார்த்தே அலைபவருக்கு அப்படித்தான் நடக்கும். தொலைநோக்குப் பார்வையெல்லாம் நிகழ்காலத்தின் தொடர்ச்சிகளாக இருக்க வேண்டும். உலகை முன்னேற்ற விரும்பும் இன்றையத் தலைவர்கள், இன்று உரிமை மீறல்களால் பலவழிகளில் துன்புறும் சிறாரின் நல்வாழ்வில் அக்கறை காட்ட முன்வரவேண்டும். நாளையத் தலைவர்களாகிய இவர்களை ஒதுக்கி வாழ்வதால் இன்றையத் தலைவர்களால் எந்த நாட்டையும் முன்னேற்ற முடியாது. ஏனெனில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு தனிமனித நல்வாழ்விலிருந்து பிறப்பது. சிறாரோடு இருப்பதால் நம் ஆன்மா குணமடைகின்றது என ஓர் ஆங்கிலப் பழமொழி சொல்கிறது. எனவே சிறார் நலனில் உண்மையான அக்கறை கொண்டு அன்பாலே அனைத்தையும் புதுப்பிப்போம்.







All the contents on this site are copyrighted ©.