2014-01-20 15:09:21

புனிதரும் மனிதரே : புனித கமில்லஸ் தெ லெல்லிஸ்(1550-1616)


சிறுவயதிலிருந்தே சீட்டு விளையாடத் தொடங்கிய கமில்லஸ் தெ லெல்லிஸ், வயது ஆக ஆக சூதாட்டத்துக்கு அடிமையானார். இத்தாலியின் வெனிஸ் பகுதிக்கு எதிராக துருக்கியர்கள் படையெடுத்தபோது, 17 வயதுச் சிறுவர் கமில்லஸ், தனது தந்தை மற்றும் இரு உறவினர்களுடன் படைப்பிரிவில் கூலிக்குச் சேர்ந்தார். அச்சண்டையில் இவரது இடது கால் காயமடைந்தது. இக்காயம் குணமடைந்தாலும் அது வலதுகால் பாதம் மற்றும் கணுக்காலுக்கு பரவியது. அக்காயம் குணமாக்க முடியாத நோயானது. சண்டை முடிந்து திரும்பிவந்த வழியில் இரு பிரான்சிஸ்கன் துறவிகளைச் சந்தித்தார் கமில்லஸ். அச்சபையில் சேருவதற்கு உறுதி எடுத்தார். உரோமையில் குணமாக்கமுடியாத நோயாளிகளுக்கான புகழ்பெற்ற மருத்துவமனைக்கு 1571ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்றார். அம்மாத இறுதியில் அங்கு பணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் கமில்லஸ், உடன் வேலைசெய்வாரோடு சண்டை போடுகிறார். நோயாளிகளைப் பராமரிக்காமல் மும்முரமாய்ச் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். டைபர் நதிக்கரைக்குச் சென்று படகோட்டிகளுடன் விளையாடுகிறார் என்று குற்றம் சுமத்தி இவரை ஓராண்டுக்குள் வேலையைவிட்டு நீக்கியது நிர்வாகம். வேலையின்றி இருந்த கமில்லஸ் மீண்டும் வெனிஸ் படையில் சேர்ந்தார். ஆனால் 1573ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதால் மீண்டும் உரோம் திரும்பினார். பழைய சூதாட்ட வாழ்வுக்கேத் திரும்பினார். போட்டிருந்த சட்டை முதற்கொண்டு அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தார் கமில்லஸ். உரோமையிலிருந்து பலேர்மோ செல்லும் எண்ணத்தில் நேப்பிள்ஸ்க்குக் கப்பலில் சென்றபோது கடும்புயலால் தாக்கப்பட்டார். மீண்டும் பிரான்சிஸ்கன் சபையில் சேர உறுதி எடுத்தார். இதற்குமுன் கடைசியாக ஒருமுறை சூதாட்டம் ஆட விரும்பினார். இது பல தடவைகள் ஆனது. தான் எடுத்த உறுதிமொழிகளை மறந்து இரவும் பகலும் சூதாடினார். கத்தி, துப்பாக்கி என அனைத்தையும் மீண்டும் இழந்தார். துன்பம் வாட்டியது. கப்புச்சின் சபை துறவி ஒருவர் இவருக்குக் கட்டட வேலை கொடுத்தார். அச்சமயத்தில் அச்சபை துறவி ஒருவரின் அறிவுரையால் கமில்லசின் வாழ்வு மாறியது. கடவுளிடம் அழுதழுது மன்னிப்பை வேண்டினார். கப்புச்சின் சபையில் இருமுறை சேர்ந்தார். ஆனால் அவரது கால் காயம் மீண்டும் மீண்டும் திறந்ததால் அனுமதி மறுக்கப்பட்டார். அதனால் அவர் சிகிச்சைக்காகச் சேர்ந்த மருத்துவமனைக்கே மீண்டும் சென்றார். கமில்லசின் ஆன்மீக குரு புனித பிலிப்நேரியின் ஆலோசனையின் பேரில் நோயாளிகளைப் பராமரிப்பதற்கென மருத்துவமனை சகோதரர்கள் என்ற சபையைத் தொடங்கினார் புனித கமில்லஸ் தெ லெல்லிஸ். 1550ம் ஆண்டு மே 25ம் தேதி இத்தாலியின் Bucchianicoல் பிறந்த கமில்லஸ், 1614ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.